

நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்ட உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி விஷால் தரப்பு முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டது குறித்து வந்த புகார்களைப் பரிசீலித்த தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவில், சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ல் நடக்க இருந்த தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை விதித்து திட்டமிட்டபடி தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரியும் விஷால் தரப்பு சார்பில் அவரது வழக்கறிஞர் கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையிட்டார்.
இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். ஆனால், இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி, மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.