

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மூன்று தம்பதிகளுக்கு சாதி மறுப்பு திருமண ஊக்கத்தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். அவர் பட்டியல் சாதியல்லாத நிவேதா என்பவரையும், ஆத்தூர், பட்டியல் சாதியைச் சேர்ந்த செல்வின் தியாகராஜன் என்பவர் சரண்யா கனிமொழி என்பவரையும் சீர்திருத்த திருமணம் செய்துள்ளனர். இதேபோல நாகர்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பட்டியல் சாதியைச் சேர்ந்த மணிகண்டீஸ்வரி என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்துக்கள்.
மத்திய அரசின், சமூகநீதித் துறையின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் நிறுவனம், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களில் ஒருவர் தலித் சமூகத்தையும் மற்றொருவர் பட்டியல் சாதி அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், அந்த தம்பதிகளுக்கு 2.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குகிறது. அந்த அடிப்படையில் இம்மூன்று தம்பதிகளும், முறையாக சான்றிதழ் பெற்று ஊக்கத் தொகை பெற விண்ணப்பித்தனர்.
ஆனால், அந்த திருமணங்கள் இந்து சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நடைபெறவில்லை. இதனால் அவர்களது கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து 3 தம்பதிகளும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "தமிழக அரசு, இந்து திருமணம் சாஸ்திர சம்பிரதாயங்களுடன் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, என சட்ட திருத்தம் செய்துள்ளது.
மாலை மாற்றிக் கொள்வது, மோதிரம் அணிந்து கொள்வது, தாலி கட்டுவது போன்ற முறைகளில் செய்யப்படும் சீர்திருத்த திருமணம், சுயமரியாதைத் திருமணம் ஆகியவையும் இந்து சட்டப்படியான திருமணம் தான்.
இதனால் மூன்று தம்பதிகளுக்கும் ஊக்கத்தொகையை எட்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்", என உத்தரவிட்டார்.