மயிலாப்பூரில் தொடர் செயின் பறிப்பு; ஸ்க்ரூ டிரைவர் கொலையாளி சிக்கினார்: கூட்டாளி தலைமறைவு
சென்னையில் 24 மணிநேரத்தில் 11 செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இதில் மயிலாப்பூர் பகுதியில் மட்டும் 5 தொடர் செயின் பறிப்புகள் நடந்தன. இதில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் நடந்த தொடர் செயின் பறிப்புகளில் மயிலாப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் செயின் பறிப்புகளில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவரை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர். சென்னையில் மோட்டார் சைக்கிளைத் திருடி மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 5 இடங்களில் தொடர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளால் பெண் ஒருவர் காயமடைந்தார்.
அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ஐஸ் ஹவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 5 இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் தொடர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டனர்.
விசாரணையில் இவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமானது, செயின் பறிப்பு நடத்திய நாளன்று மயிலாப்பூர் பகுதியில் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவந்தது.
மேலும், இந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் நபர் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்து வரும் நபர் மேற்படி இடங்களில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடபட்டது, சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் சரக உதவி ஆணையாளர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைத்து, சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.
குற்றவாளியின் புகைப்படத்தை போலீஸார் ஆய்வு செய்தபோது பின்னால் அமர்ந்து சென்ற நபர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு பல முறை கைதாகி சிறை சென்ற சரித்திரபேரேடு குற்றவாளி ராகேஷ் எனத் தெரியவந்தது.
மூலக்கடையைச் சேர்ந்த ராகேஷ் மீது 2016-ம் ஆண்டு 2 கொலை வழக்குகள் உள்ளன. சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணியில் 2 கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் ராகேஷ். ஸ்க்ரூ டிரைவரால் கொலை செய்வது அவரின் வழக்கம். இதுதவிர செயின் பறிப்பு, வழிப்பறி என பல வழக்குகள் ராகேஷ் மீது உள்ளன.
ராகேஷை உடனடியாக போலீஸார் கைது செய்து செயின் பறிப்புக்குப் பயன்பட்ட மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர். மோட்டார் சைக்கிளை ஓட்டிய கூட்டாளி சீனு என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
