வெற்றிடம் அல்ல இது; ஸ்டாலின் இருக்கக்கூடிய இடம் என்பதை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

வெற்றிடம் அல்ல இது; ஸ்டாலின் இருக்கக்கூடிய இடம் என்பதை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு
Updated on
2 min read

வெற்றிடம் வெற்றிடம் என்று சொன்னார்கள். வெற்றிடம் அல்ல. இது ஸ்டாலின் இருக்கக்கூடிய இடம் என்பதை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ஸ்டாலின் பேசியதாவது:

''நாம் பெற்றிருக்கக்கூடிய வெற்றியைப் பற்றி தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தெளிவாகவும் விரிவாகவும் சிறப்பாகவும் உரையாற்றினர். அவர்கள் உரையாற்றியதை நான் வழிமொழிகிறேன். 9 மாதங்களுக்கு முன்னால் நம் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு வங்கக் கடலோரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் 96-வது பிறந்த நாள் விழா இது. இன்னும் நான்கே ஆண்டுகளில் தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம்.

இன்னும் உறுதியாக நான் சொல்ல விரும்புவது, தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறபோது திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். ஆளுங்கட்சியாக இருந்து தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப் போகிறோம். ஆக, அந்த உறுதியை சபதமாக ஏற்கக்கூடிய விழாவாக நான் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நான் தொடங்குவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடத்தில் நான் ஒரு சபதம் எடுத்தேன். அந்த சபதத்தை எடுத்துதான் நான் பிரச்சாரம் செய்தேன். கலைஞரின் மகன் சாதித்திருக்கிறான் என்ற பெயரை எடுப்பேன் என்று அவரது நினைவிடத்திலே நான் சபதம் எடுத்தேன். கலைஞரின் மகனாக சாதித்திருக்கிறேன். நான் என்று சொன்னால் தனிப்பட்ட ஸ்டாலினாக அல்ல. கலைஞரின் மகன் நான் மட்டுமல்ல, இங்குள்ள உடன்பிறப்புகள் அத்தனை பேரும் கலைஞரின் மகன்கள்தான்.

நாம் ஒன்றுசேர்ந்து, ஒன்றிணைந்து, ஒற்றுமை உணர்வோடு, ஒருமித்து நாம் பணியில் ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். இது நம் அனைவரின் சாதனை.

அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக கலைஞர் பொறுப்பெற்ற பிறகு திமுக கூட்டணி 38 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. கலைஞரின் மறைவுக்குப் பிறகு நான் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திமுக கூட்டணி 38 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. சரித்திரம் திரும்பியிருக்கிறது.

தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார். ஸ்டாலின் என்றால் உழைப்பு. உழைப்பு.. உழைப்பு... இந்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது. இந்திய அளவில் 3-வது பெரிய கட்சியாக திமுக நாடாளுமன்றத்தில் நுழையக் காரணம் கலைஞரின் சக்திதான். திமுக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட 18 தொகுதிகளுக்கு மேல் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கலைஞரின் சக்தி காரணம்.

கலைஞர் பாதி சக்தியைக் கொடுத்தார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றோம். மீதி சக்தியைத் தாருங்கள். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவோம்.  அதுதான் உங்களுக்கு நாங்கள் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

வெற்றிடம் வெற்றிடம் என்று சொன்னார்கள். வெற்றிடம் அல்ல. இது ஸ்டாலின் இருக்கக்கூடிய இடம் என்பதை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in