கடும் உழைப்பால் புதுவை முதல்வராக உயர்ந்தவர் ஜானகிராமன்: ராமதாஸ் இரங்கல்

கடும் உழைப்பால் புதுவை முதல்வராக உயர்ந்தவர் ஜானகிராமன்: ராமதாஸ் இரங்கல்
Updated on
1 min read

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78. அரசு மரியாதையுடன் ஜானகிராமனின் உடல், அவர் பிறந்த கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக, ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "புதுவை மாநில முன்னாள் முதல்வரும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

புதுவையில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்த ஜானகிராமன் தமது கடுமையான உழைப்பால் அரசியலில் படிப்படியாக முன்னேறி முதல்வராக உயர்ந்தார். ஏழை மக்களின் துயரங்களை நன்றாக உணர்ந்திருந்ததால் அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தயாரித்து செயல்படுத்தினார். அதனால் தான் புதுவை நெல்லித்தோப்பு தொகுதியிலிருந்து 5 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அரசியலைக் கடந்து என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எனக்கு நல்ல நண்பர்.  1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு புதுவையில் அரசியல் குழப்பம் நிலவிய போது, பாமகவின் ஆதரவுடன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டார்.

ஜானகிராமனின் மறைவு அவரைச் சார்ந்தவர்களுக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திமுகவினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்", என, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in