Published : 01 Jun 2019 02:05 PM
Last Updated : 01 Jun 2019 02:05 PM

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் அப்பட்டமான இந்தித் திணிப்பு: வேல்முருகன்

புதிய கல்விக் கொள்கையில், மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித் திணிக்கப்படுவதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, வேல்முருகன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மீண்டும் பிரதமரான மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது. கடும் எதிர்ப்புக்குள்ளாதனால் கிடப்பில் போட்டிருந்த புதிய கல்விக் கொள்கையை இப்போது கொண்டுவருகிறார்.

சனாதன வர்ணாசிரம அடிப்படியிலான கல்விக் கொள்கை அது. மேல்சாதியினருக்கு மட்டுமே கல்வி என்ற மறைபொருளைக் கொண்ட கொள்கை. சூத்திரரையும் பஞ்சமரையும் கல்வியிலிருந்து தானாகவே வெளியேறவைக்கும் கொள்கை. இந்தியச் சமூகத்தின் ஒட்டுண்ணியாய் இருக்கும் ஒரு மைக்ரோ சிறுபான்மையினருக்காகவே உருவாக்கப்பட்ட கொள்கைதான் அது. அந்த கல்விக் கொள்கையைத்தான், தேர்தலால் இடங்களைக் கூட்டிக்கொண்ட தைரியத்தில் கொண்டுவருகிறார் மோடி.

அந்த கல்விக் கொள்கையின் 484 பக்கங்களைக் கொண்ட புதிய வரைவை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு நேற்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் கையளித்தது. அந்த வரைவு, மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்கிறது. இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்த மாநிலத் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தோடு இந்தியையும் கற்பிக்கச் சொல்கிறது. இதை ஆறாம் வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறுகிறது. 

இந்த கல்விக் கொள்கை வரைவு பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை, ஜூன் 30 ஆம் தேதி வரை அதற்கான இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் பாஜக மோடி அரசு அறிவித்துள்ளது.

மாநில உரிமையைப் பறிக்கும் இந்த அரதப் பழசான புராணகால புரட்டுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் இது, மும்மொழித் திட்டம் என்ற பெயரில் அப்பட்டமான இந்தித் திணிப்பாகும்; தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகும்.

அதேநேரம் தமிழர்களின் உரிமையைப் பறிக்க "மோடி யார்?" எனக் கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! எங்கள் உணர்வோடு விளையாடுவதை  மத்திய  மோடி  அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும்", என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x