

தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத் துக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி தேனி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் இருந்து 14 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் செப். 4-ல் தனிநீதிபதி முன் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பின், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனங்களுக்கு தடை விதித்தும், ஏற்கெனவே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் பணியில் சேரவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்விச் செயலர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய் தார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி வாதிடும்போது, ’ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் சலுகை வழங்குவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. நீதித்துறை ஆய்வுக்கு வரம்பு உள்ளது. மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தாக்கலான மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் லஜபதிராய் வாதிடும்போது, ‘ஆசிரியர் நியமனத்தில் வெயிட் டேஜ் மதிப்பெண் முறையை கடைப்பிடிப்பது சட்டவிரோதம். ஆசிரியர் படிப்பு, பிளஸ் டூ மற்றும் உயர்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் 2005-ல் நடைமுறையில் இருந்த பாடத்திட்டம் வேறு. இப்போதுள்ள பாடத்திட்டம் வேறு. முந்தைய பாடத்திட்டத்தில் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற முடியாது. இப்போதுள்ள பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. இந்த வித்தியாசத்தை கணக்கில் கொள் ளாமல் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது சரியானது அல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது’ என்றார்.
விசாரணை முடிந்த நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.