Published : 22 Jun 2019 08:10 AM
Last Updated : 22 Jun 2019 08:10 AM

வேலூரில் குட்கா, மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசிக பிரமுகர் உட்பட 2 பேர் கைது: மாதிரிகளை சென்னை ஆய்வு மையத்துக்கு அனுப்ப முடிவு

வேலூரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூலப் பொருட்களை பதுக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரிகளை சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘சென்னை திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு (ஓசிஐயு) காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் வேலூர் சைதாப்பேட்டை அஹ்மது பெய்க் பங்களா தெருவில் உள்ள முகமது இப்ராகிம் (38) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளராக உள்ளார்.

அவரது வீட்டில் இருந்து 55 கிலோ எடையுள்ள 55 சாக்குப்பைகள் மற்றும் 30 கிலோ எடையுள்ள 25 சாக்குப்பைகளில் புகையிலை மூலப் பொருட்கள் இருந்தன. 20 கிலோ எடையுள்ள இரண்டு சாக்குப்பைகளில் புகையிலை புவுடர், 15 கிலோ எடையுள்ள ஒரு சாக்குப்பையில் வெள்ளை நிற கற்கள், 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேனில் ஹான்ஸ் ரசாயனம், 50 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 200 ஹான்ஸ் காலி பாக்கெட்டுகள் என மொத்தம் மூன்றரை டன் அளவுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக முகமது இப்ராகிம் மற்றும் அக்தர் பாஷா என்ற அப்சல்பாஷா (24) ஆகியோரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.80 ஆயிரத்துக்கு குட்கா மூலப் பொருட்களை வாங்கியதாக முகமது இப்ராகிம் தெரிவித்துள்ளார். சிலரது உதவியுடன் குட்காவை தயாரித்து விற்கமுகமது இப்ராகிம் திட்டமிட்டுள்ளார். இதன் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள மூலப் பொருட்களின் மாதிரிகளை சென்னையில் உள்ள கிங்ஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முகமது இப்ராகிமின் வீட்டுக்கு அருகில் அரசுப் பள்ளி உள்ளது.

பள்ளிக்கு அருகிலேயே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராகிம், அக்தர்பாஷா ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x