Published : 03 Sep 2014 02:59 PM
Last Updated : 03 Sep 2014 02:59 PM

இலங்கைத் தமிழர்கள் சுதந்திரம் பெறும் வரை போராட வேண்டும்: டெசோ ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு

"இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு, உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவதை நிறைவேற்றுகின்ற வரையில் தொடர்ந்து போராட வேண்டும்" என 'டெசோ' ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.

இலங்கை அதிபர் மற்றும் அந்த நாட்டு பிரதிநிதிகளை ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க கூடாது, இலங்கை அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐ.நா விசாரணை குழு விசாரணையை தமிழர் நாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்களை வலியுறுத்தி 'டெசோ' அமைப்பு சார்பில் இன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீர பாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.

கருணாநிதி பேசியதாவது:

"தமிழ் இனத்திலே ஒரு பகுதி இலங்கையிலே வாழ்கின்ற பகுதியிலே உள்ளவர்கள் இன்றையதினம் அடிமைகளாய் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு விடிவு காலமே தெரியாதா, தமிழனாகப் பிறந்தால், அதுவும் இலங்கையிலே பிறந்தால் எப்போதுமே விடிவு காலம் கிடையாதா?

இலங்கைத் தமிழன் என்ற நிலையிலே வாழ வேண்டிய அளவுக்கு ஒரு நிலை ஏற்பட்டால், அவன் பொட்டுப்பூச்சிகளாய் வாழ வேண்டுமா என்ற அந்தக் கேள்விக்கு எப்பொழுது தான் நாம் விடை காணப் போகிறோம் என்று விட்ட பெரு மூச்சினுடைய அடையாளம் தான் இன்று நடைபெறுகின்ற இந்த அணிவகுப்பு.

அணிவகுப்பு என்பதால், நாம் படை கொண்டு இலங்கைக்குச் செல்லப் போகிறோம் என்பதல்ல. ஆனால் படை கொண்டு காட்டுகின்ற வல்லமையை விட அதிக வல்லமை நம்முடைய இயக்கங்களுக்கு உண்டு. நம்முடைய பேச்சுக்கு உண்டு. நம்முடைய செயலுக்கு உண்டு. நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர்கள் வழியில் இலங்கைத் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.

பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்தச் சூளுரையை ஏற்க வேண்டுமென்பதற்காகத் தான் இன்றையதினம் இங்கு மாத்திரமல்ல, தமிழகத்திலே இன்றைக்கு மாத்திரமல்ல, தொடர்ந்து இது போன்ற அணிவகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும், அப்படி நடைபெற்றால் தான் அது கேளாக் காதினருடைய காதுகளைத் திறக்கும்.

இந்த முழக்கம் கேட்டு ராஜபக்சேயின் செவிப்பறைகள் கிழியட்டும் என்பதல்ல; ராஜபக்சேவை நாம் அமைதியான முறையிலே தான், அறவழியிலே தான் கேட்கிறோம். அவர் வழியிலே அல்ல. ராஜபக்சேவின் வழி வன்முறை வழி. பலாத்கார வழி. படு கொலை வழி. தமிழர்களுடைய பிணங்களைக் காணுகின்ற வழி. அந்த வழியை நாம் மேற்கொள்ளாமல் அறவழியில், அண்ணா வழியில், அய்யா வழியில், தமிழர்களுடைய நெறிப்படி ஏற்றுக் கொண்ட அந்த வழியில் சந்திக்கின்றோம்.

"அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சம் என்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும், அச்சம் என்பது இல்லையே" என்ற பாரதியின் பாடலுக்கு எடுத்துக் காட்டாக நாம் நிற்போம். நின்று வென்றிடுவோம்.

இன்றைக்கு நாம் முழு வெற்றியைப் பெற முடியாவிட்டாலும்கூட, வெற்றிக்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. அந்த வெற்றிக்கான அடையாளங்களை, நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டு இந்த "டெசோ" அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கெல்லாம் தமிழர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை - இந்தியாவிற்கு மாத்திர மல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவதற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x