Published : 22 Jun 2019 09:33 AM
Last Updated : 22 Jun 2019 09:33 AM

தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கான செயலி!- இந்தியாவின் பெரிய கேள்வி-பதில் தளம்

ஆண்ட்ராய்ட் போன் இருக்கிறது; ஆனால் ஆங்கிலம் தெரியாததால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்று அங்கலாய்ப்பவர்களுக்காக வந்துள்ளது புதிய செயலி. இந்தியாவின் மிகப் பெரிய கேள்வி-பதில் தளமான இந்த செயலி, தற்போது தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகை 130 கோடியைத் தாண்டிவிட்டது. ஏறத்தாழ 40 கோடி பேர் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலானவர்கள் செல்போன் மூலம் இணையதள பயன்பாட்டைப் பெறுகின்றனர். எனினும், ஆங்கில மொழி மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்துவதால், எல்லோராலும் செல்போனை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்ற குறை உள்ளது.

கூகுள், விக்கிபீடியா போன்றவையும் குறிப்பிட்ட பயனாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும், நமது சந்தேகங்களுக்கு இவற்றில் கிடைக்கும் பதில்களும், தகவல்களும் 100 சதவீத நம்பகத்தன்மையுடனும் இல்லை. இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய கேள்வி-பதில் தளமான வோகல் (vokal) தற்போது தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் நிறுவனர்களான அப்ரமேய ராதாகிருஷ்ணா, மயங்க் பிடவாட்கா மற்றும் முதன்மைப் பொறியாளர் மதுபாலன் ஆகியோர் `வோகல்’ செயலியின் தமிழ் தளத்தை கோவையில் நேற்று அறிமுகப்படுத்தினர். அவர்களை சந்தித்துப் பேசினோம்.

“இந்திய நாடு சுமார் 90 சதவீதம் வட்டார மொழி வழக்கைக் கொண்டது. ஆனால், ஏறத்தாழ 10 சதவீத மக்கள் மட்டுமே சிறந்த ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக உள்ளனர். வட்டார மொழி பேசும் பெரும்பாலானவர்கள் தற்போது ஸ்மார்ட்போன்களையும், இணையதள சேவையையும் பெறுகின்றனர். எனினும், இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவை ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளன. இந்திய வட்டார மொழிகளில் மிகக் குறைந்த அளவிலான தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன.

இணையத்தைப் பயன்படுத்தும், வட்டார மொழி பேசும் மக்களுக்கும், இணையப்  பயன்பாட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவும் ஒரு செயலி தான் `வோகல்’.  இது, நாட்டின் மிகப் பெரிய, பல தரப்பட்ட வட்டார மொழிகளைக்  கொண்ட, கேள்வி-பதில் வடிவத்தில்,  அறிவாற்றலைப் பகிரும் தளமாகும்.

இதற்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ள இலவச செயலியை ஆண்ட்ராய்ட் போனில் பதிவிறக்கம் செய்தோ  அல்லது https://getvokal.com என்ற இணையதள முகவரியின் மூலமாகவோ அணுகி, நமது கேள்விகளுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

இந்த செயலியில் பயனாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பல்வேறு துறை தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவாளர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு மூலம் பதில் அளிக்கப்படும்.  இதன் மூலம், நாட்டின் கடைக்கோடியைச் சேர்ந்தவர்களாலும், குறிப்பிட்ட துறை சார்ந்த கேள்விகளுக்கு, அந்த துறை சார்ந்த நிபுணர்களின் பதில்களைப் பெற முடியும். இந்தியாவில் முதல்முறையாக, கேள்விகளுக்கு,  ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பதில்களைப் பெற வாய்ப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி இதுவேயாகும். இந்த செயலியில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா, அசாமி உள்ளிட்ட மொழிகளில், பயனாளர்கள் தங்களது கேள்விகள் அல்லது சந்தேகங்களைக் கேட்டு, அவற்றுக்கான பதில்களை நேரடியாகப் பெறலாம்.

இதற்காக அனைத்து மொழிகளைச் சேர்ந்த பல்துறை நிபுணர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இந்த செயலியில் இணைக்கப்பட்டு, பதில்களை அளிக்கின்றனர். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பதில்கள் மட்டுமின்றி, நேரடியாகவும் பதில்களைப் பெறலாம். தமிழ் மொழிக்கான தளத்தில் சுமார் ஆயிரம் நிபுணர்கள் இணைக்கப்பட்டு, பயனாளர்களின் கேள்விகளுக்கு ஆடியோ, வீடியோ மூலம் பதில் அளிப்பார்கள்.

பயனாளர்களின் கேள்விக்கு ஏற்கெனவே பதில் இருந்தால், உடனடியாக பதில் கிடைத்துவிடும். பதில் இல்லாத கேள்வி எனில், குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தில் பதில் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 10 லட்சம் கேள்விகளுக்கான பதில்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழில் சுமார் 25 ஆயிரம் கேள்விகளுக்கான பதில்கள் வீடியோ, ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கேள்விகள் வேலைவாய்ப்பு, தொழில் தொடர்பான கேள்விகளாக உள்ளன. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, பல்துறை நிபுணர்கள் குழுவினர் சரிபார்த்த பின்னரே, பயனாளிக்குக் கிடைக்கச் செய்கின்றனர். மருத்துவத் துறை கேள்விகளைப் பொறுத்தவரை, உடல் எடையைக் குறைப்பது எப்படி உள்ளிட்ட சில கேள்விகளுக்கு மட்டுமே பொதுவான பதில் அளிக்கப்படுகிறது. மற்றபடி, மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை முறைகள் தொடர்பான கேள்விகளைத் தவிர்த்து விடுகிறோம்.

இந்த `வோகல்’ செயலி தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல, இதுவரை விளம்பரமும் அனுமதிக்கப்படவில்லை.

கூகுள்,  விக்கிபீடியா போன்றவை, நமது கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை நம்முன் பரப்புகின்றன. அதேசமயம், `வோகல்’ செயலி கேள்விகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆடியோ, வீடியோவாக பதில் அளிக்கிறது. இதுதான் இந்த செயலியின் சிறப்பம்சம்.

இதில் கேள்வி கேட்பவர், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. கேள்வியும், பதிலும் மட்டும் பொதுவெளியில் உலவும். கேள்வி கேட்டவர் அடையாளம் வெளிப்படுத்தப்படாது.

இந்தியாவில் வட்டார மொழி பேசும் மக்களின் இணைய பயன்பாட்டின் அளவு, அமெரிக்க மாகாணங்களின் மக்கள்தொகையைக் காட்டிலும் அதிகம்.

இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர், தனது கேள்விக்கு விடை காண பெரிதும் போராட வேண்டியிருக்கிறது. தங்களது சந்தேகங்களை இணையத்தில் தேடினாலும், தேவையான உள்ளடக்கங்கள் கிடைப்பதில்லை.  பன்முகத்தன்மை கொண்ட மொழி அமைப்பு நிலவும் இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் செயலிகள் வெளியிடுவது பெருமைக்குரியது.

பதில் தேடுபவர்கள் மட்டுமின்றி, பதில் அளிக்க விரும்பும் தொழில்நுட்ப நிபுணர்கள், கல்வியாளர்கள், பல்துறை அறிஞர்கள் ஆகியோர், தங்களது பதில்கள், விளக்கங்கள், கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கிறோம்.  வட்டார மொழி பேசும் பல கோடி இணையப் பயனாளர்களின் அறிவுத்தேவையை பூர்த்தி செய்வதே எங்களது இலக்கு” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x