நடப்பு கல்வியாண்டிலாவது விளையாட்டு வகுப்புகளுக்கான உடற்கல்வி பாட புத்தகம் வழங்க வலியுறுத்தல்

நடப்பு கல்வியாண்டிலாவது விளையாட்டு வகுப்புகளுக்கான உடற்கல்வி பாட புத்தகம் வழங்க வலியுறுத்தல்
Updated on
2 min read

நடப்பு கல்வியாண்டிலாவது விளையாட்டு வகுப்புகளுக்கு என தயாரிக்கப்பட்டுள்ள உடற்கல்வி பாட புத்தகத்தை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் என 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பொதுவாக, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரத்யேக பாடங்கள் வாரியாக புத்தகம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த புத்தகங்களில் உள்ள பாட திட்டங்கள், சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும்.

அதேபோல், பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டு இருப்பது போல், விளையாட்டு பிரிவுக்கும் வாரத்துக்கு 2 வகுப்புகள் ஒதுக்கப்பட்டு இருக்கும். இந்த விளையாட்டு பிரிவுகளின் போது, மாணவர்கள் மைதானங்களுக்கு சென்று கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவர்.

இந்த விளையாட்டு வகுப்புகளுக்கு என பிரத்யேக பாடப் புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு, அரையாண்டு, இறுதித்தேர்வுகளின் போது விளையாட்டு பாடத்துக்கான தேர்வு நடத்தப்படுகிறது.

இது குறித்து பெயர் கூற விரும்பாத அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் கூறும் போது,‘‘ பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மற்ற பாடங்களை போல், விளையாட்டு வகுப்புக்கும் பிரத்யேகமாக உடற்கல்வி பாடத்திட்டம் வகுப்பு வாரியாக தயாரிக்கப்படுகிறது. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

மற்ற பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்படும் போது, இந்த உடற்கல்வி பாடத்திட்டங்களும் மாற்றப்படுகிறது. ஆனால், இந்த உடற்கல்வி பாட திட்டம் புத்தகமாக அச்சாகி வெளியே வருவது இல்லை. மாணவர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் புத்தகமாகவோ, ஆவணமாகவோ வழங்கப்படுவதும் இல்லை. வகுப்பு வாரியாக விளையாட்டு வகுப்புக்கு என தயாரிக்கப்பட்ட உடற்கல்வி பாடத்திட்டத்தில், ஒவ்வொரு வகுப்புக்கும் தகுந்தவாறு குறிப்பிட்ட விளையாட்டுகள் பிரித்து முழு விவரமாக வழங்கப்பட்டு உள்ளது.

அந்த பாடத்திட்டத்தில், என்னென்ன விளையாட்டுகள் உள்ளன, விதிமுறைகள், விளையாட்டு மைதானங்களின் அளவு விவரம் போன்றவை ஒவ்வொரு வகுப்புக்கும் தகுந்தவாறு குறிப்பிடப்பட்டு இருக்கும். எனவே, விளையாட்டு பிரிவுக்கு உண்டான பாடத்திட்ட புத்தகத்தை நடப்பு கல்வியாண்டிலாவது புத்தகமாக அச்சடித்து மாணவ, மாணவிகளுக்கு வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் முன்வர வேண்டும்,’’ என்றனர்.

குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சிவபிரகாஷ் கூறும் போது, ‘‘விளையாட்டு வகுப்புக்கு என பிரத்யேகமாக உடற்கல்வி பாட புத்தகம் வெளியிடப்பட்டால், அது மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் மாணவர்கள் விளையாட்டு துறையை பற்றி நன்கு தெரிந்து கொண்டு, பயிற்சியில் ஈடுபடுவதற்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைப்பதற்கும் உதவும்,’’ என்றார்.

சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘விளையாட்டு பிரிவுக்கான பாட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அரசு அனுமதித்தவுடன், பள்ளிக்கல்வித்துறை மூலமாக புத்தகமாக வழங்கப்படும்,’’ என்றார்.விளையாட்டு வகுப்புக்கு என பிரத்யேகமாக உடற்கல்வி பாட புத்தகம் வெளியிடப்பட்டால், அது மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in