

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, மும்மொழிக் கல்வி சார்ந்த பகுதி அமையாததால், தற்போது திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளதாக புதிய கல்விக் கொள்கைக் குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''கல்விக் கொள்கையின் அடிப்படைக் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, மும்மொழிக் கல்வி சார்ந்த பகுதி அமையவில்லை. இதனால் தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை சர்ச்சைக்குள்ளாகும் என்பதை முன்னரே கண்டறிந்தோம். மும்மொழிக் கொள்கைக்கு மாற்றம் என்ன என்பது குறித்தும் கலந்து ஆலோசித்தோம். அதே வேளையில் மொழிக் கொள்கையின் நோக்கத்தை சரியாக உணர்த்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவிடம் அனுமதி பெற்று, திருத்தப்பட்ட கல்விக் கொள்கையை வெளியிட்டோம்.
மும்மொழிக் கொள்கையோடு, மூன்றாவதாக எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று திருத்தம் செய்தோம். இதன்படி, எந்தெந்த மொழிகளைக் கற்பிக்கலாம் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்'' என்று கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.