

தமிழகத்தில் மூளைக்காய்ச்சல் நோய் வர வாய்ப்பில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்களுக்கான ரத்த தானம் முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கோவையில் இளம் பெண் ஒருவர் மூளைக்காய்ச்சல் நோயால் பலியானதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர்.
அப்போது பேசிய அமைச்சர், ''மூளைக்காய்ச்சல் என்பது தொற்றுநோய் அல்ல. தமிழகத்தில் மூளைக்காய்ச்சல் நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனால் இங்கு அந்நோய் வர வாய்ப்பில்லை'' என்றார்.
பிஹார் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு பலியாகினர் என்பது கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து அமைச்சரிடம் நிஃபா வைரஸ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ''நிஃபா வைரஸ் தொற்றுநோய் தான். ஆனால், அது பரவாமல் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் தண்ணீர் தேவைப்படுவதாகக் கூறினார். இன்று தமிழகம் முழுவதும் 13,500 காவலர்களில் பெறப்படும் ரத்தம் 89 ரத்த தான முகாமில் சேமிக்கப்படும் என்றார்.