Published : 19 Jun 2019 08:02 PM
Last Updated : 19 Jun 2019 08:02 PM

தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து வரும் 22-ம் தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், '' “குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன?” “நீர் வற்றி  வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அதிமுக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியும், முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர- ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன் வரவில்லை.

தண்ணீருக்காக  காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் பொது மக்களையும் கொச்சைப்படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதல்வரும் பேட்டியளித்து வருகிறார்கள். “குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி கொடுக்கிறார். “எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையைப் பெரிதாக்கி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்குமே நேரடியாக எச்சரிக்கை விடுக்கிறார். தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் தோல்வியடைந்து நிற்பதோடு மட்டுமின்றி- துறை அமைச்சரும், முதல்வரும் அளிக்கும் பேட்டிகள் “குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்து விட்ட கதையாக” இருக்கிறது.

“உணவகங்கள் மூடப்படுவது”, “பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது”, “ஐ.டி. கம்பெனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டிருப்பது” “பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது” என்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி, சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி தினம் தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன்னலுக்கு உள்ளாகி- குடிநீர் இல்லாப் பிரச்சினை எதிர்காலத்தின் மீதே மக்களுக்கு ஒரு பீதியையே ஏற்படுத்தியுள்ளதை இந்த அரசு ஏற்க மறுத்து- குடிநீர் பிரச்சினையே இல்லை என்று பொறுப்பற்ற விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. கடமை தவறிய அதிமுக அரசு கண்ணையும் மூடிக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

ஆகவே, அதிமுக அரசின் அலட்சியத்தையும், முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படு தோல்வியையும் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்க உடனடியாக ஆக்கபூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியும் வருகின்ற 22-ம் தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக மாவட்டச் செயலாளர்கள் பொதுமக்களின் ஆதரவுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறவழியில் நடத்திட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x