Published : 05 Jun 2019 12:10 PM
Last Updated : 05 Jun 2019 12:10 PM

திருவாரூர் மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் பொலிவு பெறும் மன்னார்குடி அரசு மகளிர் பள்ளி: நர்சரி வகுப்புகள், ஆங்கில வழிக் கல்வியில் பிளஸ் 1 பாடப் பிரிவுகள் தொடக்கம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மாதிரிப் பள்ளியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பள்ளியில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம், மாநிலம் முழுமைக் கும் 32 பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக அறிவித்து, தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியைக் கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் மாதிரிப் பள்ளியாக மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, இப்பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள், கணினி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப் பட்டு வருகின்றன. மேலும், இந்த கல்வியாண்டு முதல் ஆங்கில வழி நர்சரி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதேபோல, மேல்நிலை வகுப்புகளுக்கும் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை கே.புனிதா கூறியதாவது:

எங்கள் பள்ளி மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழக அரசால் முதல்கட்டமாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக 6 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவிகளின் கல்வி பயன்பாட்டுக் காக 7 கணினிகளும், தொலைக் காட்சிகளும் வாங்கப்பட்டுள்ளன. 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன.

மேலும், பொதுப்பணித் துறை மூலம் பள்ளி முழுவதும் வண் ணங்கள் பூசப்பட்டு, புத்துரு வாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கண்கவர் ஓவியங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. இதுதவிர, விளையாட்டு மைதானத்தையும் மேம்படுத்த உள்ளோம். பள்ளிக்குத் தேவையான விளை யாட்டு உபகரணங்கள் வாங்கப் பட்டுள்ளன.

ஏற்கெனவே, 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய மாதிரிப் பள்ளி அறிவிப்பையொட்டி, இந்த ஆண்டு முதல் பிளஸ் 1-ல் கணிதப் பாடத்தை உள்ளடக்கிய உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை ஆங்கில வழியிலும் தொடங்க உள்ளோம்.

மேலும், எல்கேஜி தொடங்கி 5-ம் வகுப்பு வரை இருபாலருக்கும் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டே அதற்கான மாணவர் சேர்க்கையை எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் தொடங்கி உள்ளோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளியை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

கடந்த கல்வியாண்டு வரை மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 820 மாணவிகள் படித்துவரும் நிலையில், மாதிரிப் பள்ளி அறிவிப்பால் வரும் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x