Published : 03 Jun 2019 02:16 PM
Last Updated : 03 Jun 2019 02:16 PM

இந்தி கட்டாயமில்லை; அவசர அவசரமாகத் திருத்தம் ஏன்?- கி.வீரமணி கேள்வி

இந்தி கட்டாயமில்லை என, அவசர அவசரமாகத் திருத்தம் செய்வது ஏன் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் ஆளும் மோடி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் சூறாவளியெனக் கிளம்பியுள்ள இந்தித் திணிப்புக்கான எதிர்ப்பினைச் சமாளிக்க 'இந்தி கட்டாயமில்லை என்று குழுவின் சார்பில் திருத்தம்' என்று ஒரு செய்தி அவசர அவசரமாகப் பரப்பப்படுகின்றது.

சில முக்கியக் கேள்விகள்

1. இது கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டியின் வரைவு அறிக்கை. இதற்கு உடனடியான திருத்தத்தை எப்படி அக்குழுவே தர முடியும்?

கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கையின் ஒரு பரிந்துரையை இவ்வளவு விரைவில் மாற்றித் திருத்தம் கூறுவது அரசியல் சட்ட ஆளுமை அம்சப்படி - சட்ட ரீதியாக எப்படி சரியானது ஆகும்?

மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் இன்னும் முடியவில்லையே - அதற்குள் குழுவின் பரிந்துரை மாற்றப்பட்ட இந்த அவசரத்திற்கான பின்னணி என்ன?

திருத்தம் என்னும் தந்திரம்

(2) இந்தத் திருத்தத்திலும்கூட ஒரு தந்திரம் - சூழ்ச்சி ஒளிந்திருப்பதைச் சற்று கூர்மையான பார்வையுடன் நோக்கினால், சில உண்மைகள் புரியும்.
தமிழ்நாட்டில் அண்ணா தலைமையில் அமைந்த அரசின் சார்பில் இருமொழிக் கொள்கை என்ற ஆட்சியின் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு - அதாவது மும்மொழித் திட்டம் ஏற்புடையதல்ல - தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

மும்மொழிக் கொள்கை கிடையாது என்று கூறவில்லையே!

மீண்டும் மாநிலக் கல்வி உரிமையைப் பறித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து, இந்தி மொழி கட்டாயமல்ல; மற்ற மொழிகளைப் படிக்கலாம் என்று இப்போது கூறி, சில காலம் சென்றவுடன், மீண்டும் இந்தியே மூன்றாவது மொழியாக இருக்கலாம் என்று பலரும் விரும்புகிறார்கள் என்று சாக்குப் போக்கு - தந்திரங்கள் செய்து வெளி வாசல் வழியாக நுழைக்கப்பட முடியாத இந்தியை - சமஸ்கிருதத்தை - கொல்லைப்புற வழியாக நுழைப்பதற்கு இது ஒரு தந்திர சூழ்ச்சி முன்னோட்ட முயற்சியேயாகும்.

மும்மொழித் திட்டம் கிடையாது என்று கூறாத நிலையில், இந்தத் திருத்தம் யாரை ஏமாற்றிட? தமிழ்நாட்டுத் தலைவர்களே, பெற்றோர்களே, மாணவர்களே, ஏமாந்துவிடாதீர்கள்" என, கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x