

மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு அளவிற்கு அரசே ஒதுக்க வேண்டும், என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:
''மருத்துவமனைகளை, மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கான மத்திய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் இளநிலை மருத்துவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும். மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேற்கு வங்க அரசை கண்டித்தும் இன்று காலை 6 மணி முதல் நாளை (ஜூன் 18) காலை 6 மணிவரை , இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் நடைபெற்றுவரும் , நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
போராடும் மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு, உடனடியாக இந்திய மருத்துவச் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களது நீண்ட கால கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும்.
# வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவர்களுக்கு உள்ள உரிமையை மம்தா பானர்ஜி கொச்சைப் படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
# நாடு முழுவதும் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கான மிக முக்கியக் காரணம், அரசு மருத்துவமனைகளின் மோசமான செயல்பாடும், பொது சுகாதாரத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்ததும் தான்.
# இதற்கு மத்திய அரசுதான் காரணம். அதுவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
# மத்திய அரசுகள் உருவாக்கிய, தேசிய நலக் கொள்கை 2002 மற்றும் தேசிய நலக் கொள்கை 2017 ஆகியவையே பொதுச் சுகாதாரத்துறை சீரழியக் காரணம்.
# மருத்துவம் தனியார் மயமானதற்கும், கார்ப்பரேட் மயமானதற்கும் மத்திய பாஜக அரசுகளின் மக்கள் விரோத தேசிய நலக் கொள்கைகளே காரணம்.
# இந்நிலையில், தற்பொழுது மோடி அரசு நடைமுறைப்படுத்தும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ,பொது சுகாதாரத்துறையை மேலும் வலுவிழக்கச் செய்து வருகிறது.
மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்துறை ஊழல் முறைகேடுகளுக்கு காரணமாகிறது. கட்டண உயர்வை உருவாக்குகிறது. பொதுமக்களைப் பாதிக்கிறது. கடன் சுமையில் சிக்கவைக்கிறது.
# எனவே, மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறைக்குப் பதிலாக பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்தி, அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை வழங்கிட வேண்டும்.
# மோடி அரசு கடைபிடிக்கும் மக்கள் நல்வாழ்வுக் கொள்கையும், மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டங்களும், கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சாதகமாக உள்ளது. சிறிய மருத்துவமனைகளுக்கு எதிராக உள்ளது. மருத்துவக் கட்டணங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளது. இது சாதாரண மக்களைப் பாதிக்கிறது.
இதனால் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான உறவில் முரண்பாடுகளும், மோதல்களும், அதிகரிக்கிறது.
# மத்திய பாஜக அரசும்,மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையும் இவற்றை எல்லாம் மறைக்கும் நோக்கத்துடன், மருத்துவர்களையும் - மருத்துவ மாணவர்களையும் திசை திருப்பும் நோக்கத்துடன், மருத்துவர்களின் நாடு தழுவிய நியாயமான போராட்டத்தை தனக்கு சாதகமாக, அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது.
# மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக மோடி அரசு பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும்.
# மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு அளவிற்கு அரசே ஒதுக்க வேண்டும்.
# சிறிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை, மருத்துவமனைகள் முறைப்படுத்தும் சட்டத்தின் மூலம் ஒழித்துக்கட்டும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
# மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைத்திடும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.
# நோயாளிகளின் எண்ணிக்கைக் கேற்ப மருத்துவர்கள்,மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையையும், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளையும் அதிகரிக்க வேண்டும்''.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.