

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு, 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 72,940 இடங்களுக்கு, 1 லட்சத்து 33,116 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன. இதில், அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்ற தகுதியான 1 லட்சத்து 3,150 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.
கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
அதில், முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்களும், புகைப்படங்களும் திரையிடப்பட்டன. அரவிந்த், ஹரீஷ்பிரபு, பிரதீபாசெந்தில் ஆகிய 3 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று, ரேண்டம் எண் அடிப்படையில், முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
மாணவர்கள் தங்களின் தரவரிசை எண்ணை செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044-22351014, 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.