Published : 15 Jun 2019 03:26 PM
Last Updated : 15 Jun 2019 03:26 PM

இரண்டு ஆண்டுகளாக நடந்த குடிமராமத்துப் பணிகள்; ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது?- வெள்ளை அறிக்கை தேவை: டிடிவி தினகரன்

குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த இரண்டாண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழக மக்களைத் திசை திருப்பவே  புதிதாக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளம், ஆறு, கால்வாய் போன்றவற்றைத் தூர்வாரி பராமரிப்பதற்காக 2017-ம் ஆண்டு ரூ.100 கோடியும், 2018-ம் ஆண்டு ரூ.331 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த நிதியைக் கொண்டு குடிமராமத்துப் பணிகளை பெயரளவுக்குச் செய்துவிட்டு, வேலை முடிந்துவிட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதனை நிரூபிக்கும் வகையில் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் ஆளுயரத்திற்குப் புதர் மண்டி கிடந்ததையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மால் பார்க்க முடிந்தது. ஏரி, குளங்களிலும் இதே நிலைமைதான் இருந்தது.

இதனால் காவிரி நீர் கடைமடை பாசனப் பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை என்ற புகாரும் எழுந்தது. அப்படியானால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.499 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை இப்போது அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியே என்ன ஆனது என்று தெரியாத நிலையில் பழனிசாமி அரசின் புதிய அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலையே  ஆகும்.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் மக்கள் தவியாய் தவிக்கும்போது, அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஆட்சியாளர்கள், மக்களைத் திசை திருப்பவே இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

உண்மையிலேயே இவர்களுக்கு நீர் மேலாண்மையில் அக்கறை இருக்குமானால், கடந்த இரண்டாண்டுகளாக குடிமராமத்துப் பணியின் கீழ் எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரிச் சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

அது மட்டுமின்றி, புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில், என்னென்ன பணிகள் நடைபெற இருக்கின்றன என்ற பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே உள்ள அரசு விதிகளின் படி தொடர்புடைய இடங்களில் என்ன பணி, எவ்வளவு நிதி, ஒப்பந்ததாரர் யார், எப்போது செய்து முடிக்க வேண்டும் போன்ற விவரங்களை வெளிப்படையாக எழுதி அறிவிப்புப் பலகையாக வைக்க வேண்டும்.

மேலும் அந்தந்த ஊர்களில் இருக்கும் விவசாய அமைப்புகள், கட்சி சாராத கிராமப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களை அமைத்து இப்பணிகளைக் கண்காணிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

இதெல்லாம் செய்யாமல் வெறுமனே அறிவிப்பை வெளியிட்டால், அது நிச்சயமாக மக்களை ஏமாற்றும் வேலையாகதான் இருக்க முடியும். அடிப்படைத் தேவையான தண்ணீர்  பிரச்சினையைக் கூட இவ்வளவு அலட்சியமாக கையாண்டால் மக்கள் இவர்களை நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்''.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x