Published : 11 Jun 2019 01:58 PM
Last Updated : 11 Jun 2019 01:58 PM

நாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு

தேர்தல் வெற்றி ஸ்டாலின் அலையால் ஏற்பட்டது என பேசிய உதயநிதி ஸ்டாலின் நாங்குனேரியில் திமுக நிற்க வேண்டும் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் ஒதுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், தந்தை கருணாநிதி பாணியில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து வேண்டிய இடங்களைக் கொடுத்து பெருவாரியான வெற்றி பெற்றார். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என்கிற முடிவை கூட்டணிக் கட்சிகள் ஏற்று ஆதரித்தன.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாங்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் போட்டியிட்டு வென்றார். இதனால் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இந்தத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று திருச்சி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நாங்குனேரி தொகுதி குறித்துப் பேசியதும், கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதியை திமுக ஒதுக்கவேண்டுமென்று பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

''தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றவர்களின் வாயில் வேட்டு வைத்திருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.

தேர்தல் முடிவுக்குப் பின் கட்சியில் எனக்கு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. நான் திமுக உறுப்பினராக இருப்பதே பெருமை.

தமிழக முதல்வராக தலைவரை அமரவைப்பதே என் முதல் கடமை. அதற்காகத் தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யவும் நான் தயார்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திமுகவின் வெற்றிக்கு மோடி எதிர்ப்பலை மட்டுமல்ல, மு.க.ஸ்டாலினின் ஆதரவு அலையும்தான் காரணம்.

நடைபெறவுள்ள நாங்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும். அடுத்து வரவுள்ள தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்காமல், திமுக அதிக அளவிலான இடங்களில் போட்டியிட வேண்டும்''.

இவ்வாறு உதயநிதி பேசினார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x