

தேனி மாவட்டம் தேவாரம் அருகே யானையால் உயிர்ப்பலி அதிகரிப்பைக் கண்டித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவாரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை யானை விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது. இந்த யானையால் இதுவரை 10 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த யானையை கும்கி யானை மூலம் பிடித்து காட்டுப்பகுதிக்கு அனுப்ப விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் மலையோர விளைநிலங்களில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. யானையை அப்புறப்படுத்தக் கோரியும், உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடத்தினர்.
கோம்பை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் கலந்துகொண்ட18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .