Published : 25 Jun 2019 06:18 PM
Last Updated : 25 Jun 2019 06:18 PM

இந்தி தேசிய மொழியும் அல்ல - பெரும்பான்மையினரின் மொழியும் அல்ல: கி.வீரமணி

தேசிய கல்வியின் ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்பதெல்லாமே அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர பிஜேபியின் சூழ்ச்சியே பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் என திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“அவசர அவசரமாக ஒரு தேசிய கல்வி; மீண்டும் மத்திய ஆட்சியைப் பிடித்துள்ள  மோடி  ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, வாக்காளரின் ஒரு விரல் மை காயும் முன்னே, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த புதிய தேசியக் கல்விக் கொள்கையில், மும்மொழித் திட்டம் என்ற ஒரு இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு ஏற்பாடு செய்து, ஆட்சி சக்கரத்தை சுழற்றுகிறது.

ஒற்றை  அதிபர்  ஆட்சி முறைக்கு அடிகோலப்படுகிறது எனவே பன்மொழி, பன் மதங்கள், பல பண்பாடுகள் - ஆகியவற்றைக் கொண்ட நம் நாட்டினை ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைத் தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கே “விடை” கொடுத்து ஒற்றை அதிபரே வரும் ஆயத்தப் பின்னணியில்) என்பதெல்லாம் புதிய திட்டத்தில் பேசப்படுகிறது.

கல்வி 1976-க்கு முன்பு மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் இருந்தது (From State list) ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent) மாற்றப்பட்டதை, ஓசையின்றி இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு - ஆக்கிரமித்து “ஜனநாயக ரீதியாகவே” செய்ய முயல்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றுதான் ஹிந்தி, மற்றொருமொழிதான் சமஸ்கிருதம். “மொழிகள்”  Languages என்று தான் அதன் தலைப்பு - “தேசிய மொழி” என்று எந்த மொழிக்கும் அரசியல் சட்ட கர்த்தாக்கள் உரிமை வழங்கவில்லை.

காந்தியார் கூறிய உருது கலந்த இந்தியல்ல

ஆட்சி மொழி (Official Languages) என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகிறபோது (Hindi in Devnagri Script) தேவநகரி எழுத்துக்களை உடைய ஹிந்தியே ஆட்சி மொழி என்று பதிவு செய்தார்கள்.

“தேவபாஷை” என்று   (செம்மொழியாயினும் தமிழ் நீச்சபாஷைதான் என்பதால் சமஸ்கிருதம் பெருமையுறுகிறது - அரசமைப்புச் சட்டத்தால்) குறிப்பிடப்பட்டதற்கு முக்கிய காரணம்,  அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள ‘ஹிந்தி’ காந்தியார் கூறிய உருது கலந்த ஹிந்துஸ்தான் என்ற இந்தியல்ல. அதை உள்ளே விடாமல் பார்த்துக் கொண்டார்கள.

ஹிந்தி பெரும்பான்மை மொழியா?

புதிய தேசியக் கல்வி கொள்கையில் உள்ள வரைவு அறிக்கைப்படி

ஹிந்தித் தொகுப்பில் 62.83 கோடி (மொத்த மக்கள் தொகை 136 கோடி மக்கள்) உள்ளனர் என்றாலும் ஹிந்தியைத் தாய்மொழி என்று குறிப்பிட்டிருப்போர் 32.22 கோடி பேர்களே.

பீகாரை எடுத்துக் கொண்டால் பொத்தாம் பொதுவில் அது ஹிந்தி பேசும் மாநிலம் என்று குறிப்பிடப்பட்டாலும்கூட,

பீகாரில் மூன்றில் ஒரு பங்கினர் போஜ்புரியையும், ஐந்தில் ஒரு பகுதியினர் மஹதியையும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

சமஸ்கிருதம் பேசுவோர் எத்தனைப் பேர்.

பெரும்பான்மையோர் ஹிந்தி பேசுவதால் அதை ஆட்சி மொழியாக்குகிறோம். ஆங்கிலம் 15 விழுக்காடுதான் என்று கூறுகின்றனர். அதன் விழுமிய பயன் இன்று இந்தியாவை மற்ற ஹிந்தி பேசாத பகுதி மக்களுடன் இணைத்திருப்பதை  வசதியாக மறந்து விட்டு, மறைத்து விட்டு  வாதிடுகிறார்கள்.

அப்படியானால் சமஸ்கிருதத்தை தாய்மொழி எனக் கொண்ட வர்கள் இந்தியாவின் 136 கோடியில் வெறும் 24,821 பேர்களே.

வெகு வெகுச் சிறுபான்மை மொழிக்கு மட்டும் தனிச் சலுகை - தனிக் கவனமாம். இந்தச் சிறப்புத் தகுதிக்கு மூலகாரணம் என்ன? ஒரே காரணம் மேலே காட்டிய ஆர்.எஸ்.எஸ். கொள்கைதான்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மற்ற மொழிகளைக் கற்றுத் தர வாய்ப்பு உண்டா? 8 கோடி மக்கள் பேசும், எழுதும், செம்மொழி தமிழுக்கு வாய்ப்பு வானொலி, தொலைக்காட்சிகளில் உண்டோ?

திராவிட இயக்கம் எழுப்பும் கேள்வி

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக அந்த அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தும்கூட இங்கே  தமிழ் பிறந்த மண்ணில் தமிழுக்குரிய இடம் தரப்படவில்லையே.

திராவிட இயக்கம் தானே இந்தக் கேள்வியை அந்நாள் தொட்டு இந்நாள் வரை கேட்டுப் போராடுகிறது. எனவே மொழி என்பது பேசும் கருவி எழுதும் வாய்ப்பு என்பதையும் தாண்டி, ஒரு பண்பாட்டின் ஊற்று என்பதை எவரே மறுக்க முடியுமா?

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்

எனவே தான் இதில் கை வைக்க முயன்றால் தேன் கூட்டைக் கலைத்தவர்களின் கதியாக ஹிந்தி சமஸ்கிருத திணிப்பாளர்களால் ஆக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

எனவே பண்பாட்டுப் படையெடுப்பு எந்த உருவத்தில் வந்தாலும் ஒன்றுபட்டு முறியடிப்போம்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x