Published : 13 Jun 2019 02:18 PM
Last Updated : 13 Jun 2019 02:18 PM

நடிகைகள் காணாமல் போனால்மட்டும்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?-ஆட்கொணர்வு மனுவில் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சாதாரண மக்கள் காணமல் போனால் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. நடிகைகள்  காணமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? என சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தனது 19 வயது மகள் கவுசல்யா காணமல் போனதாக திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த பிப்ரவரி மாதம்முதல் தனது மகளை காணவில்லை எங்கு சென்றார் என்ற தகவல் இல்லை. இந்நிலையில் என் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் மனுகுறிந்த விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “நான்கு மாததிற்கு முன் புகார் அளித்தும் காவல்துறைக்கு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள். சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல் துறை நடவடிக்கைகள் இப்படி தான் இருக்குமா?

மாதம் ஆனால் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் உறவினர்கள், அல்லது அவர்கள் வீட்டில் இப்படி யாரேனும் காணமல் போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக  எடுத்து கொள்வார்களா?

நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. திரைப்பட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல் துறை செயல்படுமா?

அதிகாரிகள் உண்மையுடன் செயல் பட வேண்டும், இல்லை என்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள்” என கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த புகார் தொடர்பாக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விசாரணையின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்களை அறிக்கையாக வரும் திங்கட்கிழமை (ஜூன்.17) தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x