போடியில் யானை தாக்கி காவலாளி பலி; ஒருவர் படுகாயம்: 6 ஆண்டுகளில் 9 பேர் பலியான சோகம்

போடியில் யானை தாக்கி காவலாளி பலி; ஒருவர் படுகாயம்: 6 ஆண்டுகளில் 9 பேர் பலியான சோகம்
Updated on
1 min read

தேனி மாவட்டம் போடி தேவாரத்தில் அதிகாலை தோட்டத்திற்குள் புகுந்த யானை காவலாளியை மிதித்துக் கொன்றது. ஒருவர் பலத்தகாயமடைந்தார்.

தேவாரம் அருகே உள்ள தோட்டங்களில் யானைகள் புகுந்து பயிர்களை அவ்வப்போது சேதப்படுத்தி வருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் யானையிடம் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் பெரம்புவெட்டி குளம் என்ற பகுதியில் யானை ஒன்று புகுந்தது.

அங்கு பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கை தோண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அருகே உள்ள மாயாண்டி தென்னந்தோப்பில் சில தொழிலாளர்கள் ஆட்டுக்கிடை அமைத்து தங்கியிருந்தனர்.

யானையின் பிளிறல் கண்டு பதறியடித்து தப்பியோடினர். அப்போது அணைப்பட்டியைச் சேர்ந்த அய்யாவு(60) நிலைதடுமாறி விழுந்தார். இவரை யானை மிதித்துக் கொன்றது. மேலும் மற்றவர்களையும் விரட்டியது. இதில் கீழசிந்தலைச்சேரியைச் சேர்ந்த கெப்புசாமி(60) காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இத்துடன் இரண்டு ஆடுகளும் யானையிடம் சிக்கி உயிரிழந்தது.மீண்டும் யானையால் உயிரிழப்பு ஏற்பட்டது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மக்னா யானைத் தொந்தரவு அதிகம் இருக்கிறது. நிம்மதியாக விவசாயம் செய்ய முடியவில்லை. உயிரையும் இழக்க வேண்டி உள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், யானைத்தொந்தரவு இருப்பதால் இரவில் தோட்டங்களில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவல் என்ற பெயரில் அங்கு சிலர் தங்குகின்றனர்.

யானை நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in