

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மாநில அரசுக்கு திமுக கூட்டணி எம்பிக்கள் அனைவரும் துணைநிற்போம் என திமுக எம்.பி. பழநிமாணிக்கம் தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்த நம்பிராஜன் மகள் வைஷ்யா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேறியதால் கடந்த 5-ம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து நேற்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் நேற்று பட்டுக்கோட்டைக்கு சென்று வைஷ்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, திமுக சார்பில்
ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினர். பின்னர் செய்தியாளர் களிடம் பழநிமாணிக்கம் கூறியதா வது: இதுவரை நீட் தேர்வில் தோல்வியடைந்த முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் இதுபோன்ற ஒரு முடிவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்களா என்றால் இல்லை. நீட் தேர்வு என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு செய்யும் அநீதி. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் இதற்கான உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆளுகின்ற அரசும் தங்களது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்போம் என கூறி இருக்கிறது. நிச்சயமாக திமுக கூட்டணி எம்பிக்கள் அனைவரும், மாநில அரசுக்கு துணை நின்று அடுத்த ஆண்டாவது நமது மாணவர்கள் நீட் தேர்வில் இருந்து விடுதலை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்றார்.