Published : 12 Jun 2019 02:32 PM
Last Updated : 12 Jun 2019 02:32 PM

சிரித்துக்கொண்டே சென்றோம்; சிரித்தவாறே வந்தோம்: அதிமுக கூட்டம் குறித்து ராஜேந்திர பாலாஜி பேட்டி

நிர்வாகிகள் கூட்டத்துக்கு சிரித்துக்கொண்டே சென்றோம். சிரித்தவாறே வெளியில் வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சிக்குள்ளே குரல்கள் வலுக்கத் தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக அதிருப்தி எம்எல் ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை, மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சந்திப்பு முடிந்து திரும்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

''அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு சிரித்துக்கொண்டே உள்ளே சென்றோம்; சிரித்துக்கொண்டே வெளியே வந்தோம். ராஜன் செல்லப்பா கோபமாக இல்லை, எந்தப் பிரச்சினையும் கிடையாது. நல்லபடியாக, திருப்திகரமாகப் பேசினோம்.

எங்களுக்குக் கிடைத்த வெற்றி பற்றியும் எதிர்காலத்தில் வெற்றிபெறுவது குறித்தும் விவாதித்தோம். கடந்த தேர்தல் முடிவுகள் குறித்தும் பேசப்பட்டது. வேறு எதுவும் இல்லை. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை நடத்துவது பற்றி, முதல்வரும் துணை முதல்வரும் சேர்ந்து முடிவெடுப்பர்.

ஒற்றைத் தலைமை குறித்த கருத்தே நிலவவில்லை. எல்லோரின் ஆதரவுடனும் இப்போதுள்ள நிர்வாகமே சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பேசப்பட்டது. ராஜன் செல்லப்பாவும் இதற்கு ஒப்புக்கொண்டார்'' என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x