Published : 08 Jun 2019 03:58 PM
Last Updated : 08 Jun 2019 03:58 PM

நீட் தோல்வியால் தற்கொலை எண்ணம் வராமல் இருக்க மாணவர்களுக்கு இறைவன் மனபலத்தை கொடுக்க வேண்டும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வராமல் இருக்க இறைவன் மனபலத்தை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நீட் தேர்வினால் மாணவர்களின் தற்கொலை அதிகரித்துக் கொண்டு வருவது குறித்த கேள்விக்கு, "நீட் தேர்வு அதிமுக அரசு கொண்டுவந்த தேர்வு கிடையாது. மத்தியில் வலுவான எதிர்ப்பை அரசு கொடுத்து கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு தோல்வியால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது.

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வராமல் இருக்க இறைவன் மனபலத்தை கொடுக்க வேண்டும்.

அனைத்து கட்சிகளும் மாணவிகள் தற்கொலையை அரசியலாக்கிப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

தமிழ் நாட்டுக்கு நீட் வேண்டுமா? வேண்டாமா? என்று மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்"என்றார்.

மும்மொழிக் கொள்கை பற்றி கேள்விக்கு "இந்தி படிப்பது தவறு கிடையாது. இந்தியை திணிப்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். கட்டாய பாடமாக்குவதையும் எதிர்க்கும்" எனத் தெரிவித்தார்.

கருத்து சொல்லத் தயராக இல்லை..

மதுரையில் ராஜன் செல்லப்பா ஒற்றை தலைமை வேண்டும் என கூறிய கருத்துக்கு, "இது அவருடைய கருத்து. அடிமட்ட தொண்டனாக இருந்து தற்போது பெரிய பொறுப்புகளில் இருக்கிறேன். இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதால் கட்சிக்குள் சலசலப்பு உருவாகிவிடும். இதற்கு நான் கருத்து சொல்லத் தயராக இல்லை" என்றார்.

முதல்வர் முடிவு சரியானதே..

8 வழிச்சாலை அமைக்கபடும் என முதல்வர் கூறிய கருத்துக்கு, "சாலை வேண்டுமா? வேண்டாமா? என்று அங்குள்ள விவசாயிகளையே கேட்க வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தோன் என எதற்கு எடுத்தாலும் கருத்து கேட்கும் கூட்டத்திற்கு பொது மக்கள் வருவதில்லை.

அரசியல் கட்சியினரே வருகின்றனர். குற்றம் ஒன்றே குறிக்கோளாக சொல்லும் கட்சிகளுக்கு நாங்கள் என்ன சொன்னாலும் ஏறாது. முதல்வர் எடுத்திருக்கும் முடிவு சரியானது" என்றார்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தவிர வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்க்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு, அவர்களை யாரும் தடுக்கவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் அம்மா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x