

திருவண்ணாமலையில் உள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க வங்கியில் ரூ.1.50 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக வெளியான தகவலால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை சன்னதி தெருவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருர் வைஸ்யா வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மாயமானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
மேலும், தங்க நகைகளைப் பெறாமல், போலியன பெயர்கள் மூலம் ரூ.1.50 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், வங்கிக்குச் சென்று மேலாளரிடம் விசாரித்தனர். மேலும் பலர், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை சரிபார்த்துக் கொண்டனர்.
இதுகுறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ் கூறும்போது, "எங்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. இதுவரை அனைத்தும் சரியாக உள்ளது. மேலும் சில தவறுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளை, வாடிக்கையாளர்கள் சரி பார்த்துவிட்டுச் செல்கின்றனர். அடகு வைத்த தங்க நகைகளை மீட்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, நகைகளைத் திருப்பி வழங்கி வருகிறோம்” என்றார்.
அப்போது அவரிடம், தங்க நகைகளை அடகு பெறாமல் போலியான பெயர்கள் மூலம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த மேலாளர் சுரேஷ், "விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கித் தலைமை மூலம் வெள்ளிக்கிழமையன்று முழுமையான தகவல் தெரிவிக்கப்படும்" என்றார்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நீங்கள் குறிப்பிடும் வங்கியில் தங்க நகைகள் மாயமானதாகப் புகார் வரவில்லை" என்றார்.
வங்கி மேலாளரின் தகவல் மூலம், வங்கியில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது உறுதியாகிறது. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க தனியார் வங்கியில் மோசடி நடைபெற்றுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர்கள் கூறும்போது, "வங்கியில் மோசடி நடைபெற்று இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் பணம் மற்றும் நகைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால், எங்களது வங்கிக் கணக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம்", என்றனர்.