Published : 15 Jun 2019 04:31 PM
Last Updated : 15 Jun 2019 04:31 PM

சாலையில் பள்ளம் தோண்டுவோர் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலைகளில் பள்ளம் தோண்டும் நிறுவனங்கள் அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

சாலை பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டமுடிவில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சியால் 387.98 கி.மீ. நீளமுள்ள 472 போக்குவரத்து சாலைகளும், 5204.36 கி.மீ. நீளமுள்ள 33601 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கு இந்திய தொழில்நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களின் உறுதுணையுடன் பெருநகர சென்னை மாநகராட்சியால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட சாலைகளில் பராமரிப்புத் துறைகளான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தொலைபேசித்துறை மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் அனுமதி கேட்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், சாலைகளை சமன் செய்ய அந்நிறுவனங்களின் வைப்புத்தொகையை செலுத்திய பின்பே அனுமதி வழங்கப்படுகிறது.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட சாலைகளில் பணிகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பின்வரும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* போக்குவரத்து காவல்துறையின் முன் அனுமதி பெற்று, சாலைவெட்டு பணி மேற்கொள்ள வேண்டும்.

* சாலை வெட்டு மேற்கொள்ளும் இடத்தில் விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* முன்னெச்சரிக்கை கருவிகளான தடுப்புகள், எச்சரிக்கை விளக்குகள், சிகப்பு கொடிகள் போன்றவைகள்

பணி நடைபெறும் இடத்தில் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

* சாலை வெட்டினை மேற்கொள்வதற்கு முன்பும், குழாய்கள் பதித்த பிறகும், மின்னஞ்சல் (seroadscoc@gmail.com) மூலமாக இத்தகவலை பேருந்து சாலைகள் துறையின் செயற்பொறியாளrஉக்கு தெரிவிக்க வேண்டும். இதன்மூலம்

சாலைவெட்டினை உடனடியாக சீர்செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

* சாலை வெட்டினை மேற்கொள்ளுவதற்கு முன்பும், பின்பும் மற்றும் பணி மேற்கொள்ளும் நிகழ்வினை காணொளி வடிவத்தில் குறுந்தகட்டில் பதிவு செய்து பேருந்து சாலை துறையின் கண்காணிப்பு பொறியாளர் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

* மேற்கூறிய சேவைத் துறையிடமிருந்து சாலைவெட்டு விவரங்கள் அடங்கிய குறுந்தகடு பெறப்பட்ட பின்னரே புதியதாக விண்ணப்பங்கள் பெறப்படும்.

* சாலைவெட்டின் நீளம் மற்றும் அகலம் போன்றவைகள் சாலைவெட்டு அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறி மேற்கொள்ளக்கூடாது.

* சாலைவெட்டினை சீர் செய்வதற்கு ஏதுவாக இருக்க சாலையின் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் தாழ்வாக குழாய்களை பதிக்கவேண்டும்.

* விபத்தினை தவிர்க்கும் பொருட்டு கேபிள் இணைப்பு அறையின் (manhole chamber) மூடியானது சாலை மட்டத்திற்கு மேலேயோ அல்லது கீழேயோ இருத்தல் கூடாது.

* அனைத்து விதமான சாலை வெட்டுக்களும் நடை பாதையிலோ அல்லது நடை பாதையின் ஓரத்திலோ (சாலையை சேதம் செய்யா வண்ணம்) மேற்கொள்ளப்பட வேண்டும்.

* நடைபாதையின் ஓரத்தில் உள்ள நடைபாதை கற்களுக்கு 0.3 மீட்டர் தொலைவிற்குள் சாலை வெட்டு மேற்கொள்ள வேண்டும்.

சிரமம் ஏற்படும் பட்சத்தில் இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் அவர்களிடமிருந்து அனுமதி பெற்றிருக்க

வேண்டும்.

* சாலை வெட்டு பணியானது சரியான அளவில் சாலை வெட்டு இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* சாலை வெட்டினை மேற்கொள்ளும்பொழுது சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.

அப்பொறுப்பாளரின் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பேருந்து சாலைத் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

* சாலை வெட்டு பணி / கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்தவுடன் பேருந்து சாலைகள் துறைக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

* சாலை வெட்டினை மேற்கொள்வதற்கான அனுமதி 30 நாட்கள் மட்டுமே செல்லத்தக்கது.

* சாலை வெட்டு அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவு வரை தான் அனுமதி செல்லத்தக்கது. அவ்வாறு முடியாத பட்சத்தில் காலநீட்டிப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

* சாலை வெட்டு பணி மேற்கொள்ளும்பொழுது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சாலை வெட்டிற்கான அனுமதி கடிதத்தினை

அலுவலர்கள் கேட்கும் நேரங்களில் காண்பிக்கப்படவேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளை கடைபிடித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x