மூத்த குடிமக்கள் ரயில், பஸ்களில் இலவசப் பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

மூத்த குடிமக்கள் ரயில், பஸ்களில் இலவசப் பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
Updated on
1 min read

மூத்த குடிமக்கள் அனைவரும் ரயில் மற்றும் பஸ்களில் உதவியாளருடன் இலவசமாகப் பயணம் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்று முதியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் உதவியாளருடன் ரயில் மற்றும் பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுபோல முதியோர் அனைவரும் (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது டையவர்கள்) உதவியாளருடன் ரயில்கள் மற்றும் பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் முதியோர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் டி.எம்.என்.தீபக் கூறியதாவது:

மூத்த குடிமக்களை நம் நாட்டின்பொக்கிஷங்களாகப் பாதுகாப்பது நமது கலாசாரம், மரபு. முதி யோரைப் பாதுகாக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை மட்டுமல்ல அரசின் கடமையும்தான். “முதிய வர்கள் தன்னந்தனியே போய் கீழே விழுந்து தலையில் அடிபட்டால், மற்றவர்களைவிட அவர்களுக்கு 3 மடங்கு அபாயம் இருக்கிறது” என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது.

மாற்றுத்திறனாளிகள் போல, முதியவர்களும் உடல்ரீதியாக இயலாதவர்கள்தான். மாற்றுத்திற னாளிகளுக்கான ஐ.நா. உரிமை உடன்படிக்கையில் இந்தியா 7-வது நாடாக கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, மாற்றுத்திறனாளி களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் முதியவர்களுக்கும் பொருந்தும். அவர்களுக்கு தடையற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில், நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் உதவியாளருடன் ரயில் மற்றும் பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்ய உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்றார் தீபக்.

திருநின்றவூரைச் சேர்ந்த தியாகி சுப்பிரமணியத்தின் மனைவி சாந்தா(71) கூறியதாவது:

தியாகியின் மனைவி என்பதால் எனக்கு ரயில்வே துறை இலவச பாஸ் கொடுத்துள்ளது. என்னுடன் ஒரு உதவியாளரை அழைத்துச் செல்லலாம். குடும்பத்தினர், சொந்தக்காரர், நண்பர், தெரிந்தவர் என்று யாரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துச் செல்ல முடியும். தனித்துச் செல்வதில் அபாயம் இருக்கிறது என்பதால் இந்த சிறப்புச் சலுகையை ரயில்வே வழங்கியுள்ளது.

ஆனால், தமிழக அரசு வழங்கியுள்ள இலவச பஸ் பயண அட்டையைக் கொண்டு நான் மட்டுமே பயணம் செய்ய முடியும். முதியவர்கள், அடிக்கடி ரயில் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யப்போவதில்லை. மருத்துவ சிகிச்சைக்கு செல்லுதல், எப்போதாவது கோயிலுக்கு போவது, உறவினர் வீடுகளுக்குப் போவது தவிர வேறு எங்கும் செல்வதில்லை. வீட்டிலே முடங்கியிருந்தால், ஒதுக்கி வைக்கப்பட் டிருப்பதாக எண்ணத் தோன்று கிறது. கோயிலுக்கு போய் வந்தால்மன அமைதி கிடைக்கும்.

எனவே, மூத்த குடிமக்கள் அனைவரும் ரயில்கள் மற்றும் அரசு பஸ்களில் உதவியாளருடன் இலவசமாகப் பயணம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். இதை முன்னோடித் திட்டமாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார் சாந்தா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in