Published : 19 Jun 2019 08:11 AM
Last Updated : 19 Jun 2019 08:11 AM

நெல்லை மாவட்ட அணைகளில் 11 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு: கேள்விக்குறியாகும் கார் சாகுபடி; விவசாயிகள் கவலை

திருநெல்வேலி மாவட்ட அணை களில் 11 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால், கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

விவசாயத்தை முக்கியத் தொழி லாகக் கொண்ட திருநெல்வேலி மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இவற்றில் மணிமுத்தாறு அணை 5,511 மில்லியன் கனஅடி, பாபநாசம் அணை 5,500 மில்லியன் கனஅடி, சேர்வலாறு அணை 1,225 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டவை.

மற்ற 8 அணைகளும் 26 மில்லி யன் கனஅடி முதல் 442 மில்லி யன் கனஅடி வரை கொள்ளளவு கொண்ட சிறிய அணைகள் ஆகும். மாவட்டத்தில் உள்ள 11 அணை களின் மொத்த கொள்ளளவு 13,771 மில்லியன் கனஅடி ஆகும்.

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கூடுதலாக பெய்தது. இதனால், அணைகள் நிரம்பி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, கார் சாகுபடி மற்றும் பிசான சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

ஏமாற்றும் பருவமழை

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் போதிய மழை பெய்யவில்லை. தொடர்ந்து வெயில் சுட்டெரித்ததால், அணை களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந் தது. தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத் திருந்த நிலையில், இந்த ஆண்டு மிகவும் தாமதமாக பருவமழை தொடங்கியது. ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் மீண்டும் வாட்டி வதைக்கிறது. இதனால், அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.

பாபநாசம் அணைக்கு நேற்று விநாடிக்கு 159 கனஅடி நீர் வந்தது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 39.55 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 52.16 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 38 கனஅடி நீர் வந்தது. 275 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 56.25 அடியாக இருந்தது.

4 அணைகள் வறண்டன

கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் முற்றிலும் வறண்டு விட்டன. சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் கோவில் ஆகிய 4 அணைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. பாபநாசம் அணையில் 10 சதவீதம், மணிமுத்தாறு அணையில் 15.54 சதவீதம், நம்பியாறு அணையில் 15.03 சதவீதம் நீர் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 11 அணைகளிலும் சேர்த்து தண்ணீர் இருப்பு 1,557.27 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது. இது, மொத்த கொள்ளளவில் 11.30 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு இதே நாளில் 11 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 5,642 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. கடுமையான வறட்சி நிலவிய கடந்த 2017-ம் ஆண்டு இதே நாளில் 706 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருந்தது. அந்த ஆண்டைப்போல் தற்போது மீண்டும் வறட்சி ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் உள்ளனர்.

கார் சாகுபடி கேள்விக்குறி

வழக்கமாக கார் சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

அணைகளில் இருக்கும் நீரைக்கொண்டு குடிநீர் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

பாபநாசம் அணையில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கா விட்டால் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறும்போது, “கோடைக் காலத்தில் அணைகள், குளங்கள், கால்வாய்களைத் தூர்வாரவும், மதகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதில்லை. அணைகளில் பல அடி உயரத்துக்கு வண்டல் மண் தேங்கிக் கிடப்பதால், பருவமழைக் காலத்தில் தண்ணீரை முறையாக சேமித்து வைக்கவும் முடியவில்லை.

கால்வாய்கள் தூர்ந்து கிடப்பதால், தண்ணீர் செழிப்பாக இருக்கும் காலங்களிலும் கடைமடைகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. நீராதாரங்களை முறையாக பராமரித்து, பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் தேவை” என்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிணற்று நீரைக் கொண்டு மானாவாரி பயிர்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை பொய்த்தால் இவையும் வறட்சியால் காய்ந்துவிடும் அபாயம் உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x