Published : 20 Jun 2019 04:12 PM
Last Updated : 20 Jun 2019 04:12 PM

குடியரசுத் தலைவர் உரை: காவிரித் தூய்மை, நீர் மேலாண்மைத் திட்டம் வரவேற்கத்தக்கவை; ராமதாஸ்

குடியரசுத் தலைவர் உரையில், காவிரித் தூய்மை, நீர் மேலாண்மைத் திட்டம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் புதிய அரசு பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்  கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

மத்திய அரசு நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முன்னோட்டமாக குடியரசுத் தலைவர் உரை அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது.

மாசுபட்டுக் கிடக்கும் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படுவதைப் போன்று, காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் அறிவித்தார். மத்திய அரசின் சார்பிலான இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புனித நதிகளில் ஒன்றாகப் போற்றப்படும் காவிரி ஆறு அண்மைக்காலமாக கர்நாடகத்தின் கழிவுநீர் கால்வாயாக மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 148.2 கோடி லிட்டர் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்க விடப்படுவதாக அம்மாநில அமைச்சரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மற்றொரு புறம் தமிழ்நாட்டில் மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள அனல்மின் நிலையம், கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை, மால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் காவிரியில் தான் கலக்கின்றன. தொடர்ந்து நொய்யலாற்றின் வழியாக சாயப் பட்டறைக் கழிவுகளும், திருச்சி பகுதியில் மாநகராட்சிக் கழிவுகளும் காவிரி ஆற்றில் சங்கமமாகின்றன.

அதன் விளைவாக கும்பகோணம் பகுதிக்கு காவிரி நீர் வரும்போது, அதில் மொத்தம் 52 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குடிநீரைக் குடிக்கும் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறு, நரம்பு பாதிப்பு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் புனித ஆறான காவிரியில் நீராடினால் நோய்கள் தீரும் என்றிருந்த நிலை மாறி, இப்போது காவிரியில் குளித்தால் நோய் தான் ஏற்படும் என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
 

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தான் பாமக கடுமையாகப் போராடி வருகிறது. காவிரி ஆற்றைப் பாதுகாக்க வேண்டும்; தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடங்கி காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டார். இது குறித்து கடந்த மக்களவையிலும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.
 

அண்மையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் போன்று காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பயனாகவே காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், நீர்வளங்களைப் பாதுகாப்பதற்காக நீர்மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்; வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும், விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டால் தமிழக மக்களும், விவசாயிகளும் பயனடைவார்கள். அவர்களின் துயரங்கள் ஓரளவாவது தீர்க்கப்படும்.

அதேநேரத்தில் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்ற அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருந்து விடக்கூடாது. அவை திட்டங்களாக மாற்றப்பட்டு, அடுத்த மாதம் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் காவிரியைத் தூய்மையாக்கும் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

அத்துடன் கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதன் அடிப்படைப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x