Published : 03 Jun 2019 11:42 AM
Last Updated : 03 Jun 2019 11:42 AM

மும்மொழித் திட்டம் என்று தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள் : திமுக தீர்மானம்

"மும்மொழித்திட்டம்" என்று  தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள் என, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கள்கிழமை)  காலை 10.00 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தீர்மானம் : 1

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைவர் கருணாநிதியின் பிரதிபிம்பங்களாகத் திகழ்ந்திட வேண்டும்:

கருணாநிதியின் ஜனநாயகப் பண்புகளையும்,இன- மொழி உணர்வுகளையும், சமத்துவ நெறிகளையும் சமூகநீதி எண்ணங்களையும், சுயமரியாதை கருத்துகளையும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிந்தனை - சொல் - செயல் ஆகிய அனைத்திலும் அணுவளவும் பிறழாது அனுதினமும் பின்பற்றி, கருணாநிதியின் உயிரோட்டம் மிக்க பிரதி பிம்பங்களாக நாடாளுமன்றத்திலும் - தொகுதியிலும் திகழ்ந்து, உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் வகையில் சீரிய செயலாற்றி, நற்பெயர் பெற வேண்டும்
 

தீர்மானம் : 2

தலைமைப் பண்பின் உறைவிடம்  மு.க.ஸ்டாலின்.

கூட்டணி மட்டுமின்றி - அதை வெற்றிக்கூட்டணியாகவும் மாற்றி - தலைமைப் பண்பின் உறைவிடமாகத்  திகக்ழ்கிறார் மு.க.ஸ்டாலின். இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நாடாளுமன்றத்தில்,  திமுக இந்தியாவின் மூன்றாவது தனிப்பெரும் கட்சி என்று ஸ்டாலின் தலைமையில் கம்பீரமாக நிற்பதை இந்திய ஜனநாயகமும் பார்த்து மகிழ்கிறது -அதை இந்தக் கூட்டமும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறது.

தீர்மானம் : 3


முனைப்புடனும், ஆர்வத்துடனும்  வாக்காளர்களைச் சந்தித்திடுக!

"வாக்கு கேட்பது உங்கள் உரிமை. கோரிக்கைகளை முன் வைப்பது வாக்காளர்களின் உரிமை”என்பதை நினைவில் வைத்து - திமுகவுக்கும் - கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்த மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த ஸ்டாலினுக்கும், பெருமை சேர்க்கும் வகையில் தொகுதிப் பணி மற்றும் நாடாளுமன்றப் பணியாற்றிட வேண்டும்.

தீர்மானம் : 4

தண்ணீர்ப்  பஞ்சத்தை நீக்க  ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திடுக!

தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆளும் அதிமுக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.
 
தீர்மானம் : 5

"மும்மொழித்திட்டம்" என்று  தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்!

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும், அதுஎந்த நேரத்தில் வந்தாலும் திமுக ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும்.

தீர்மானம் : 6

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெறுக - காவிரி டெல்டா மாவட்டங்களை " பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக" அறிவித்திடுக.

விவசாயிகளின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மறுசிந்தனை ஏதுமின்றி, திரும்பப் பெற வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x