அழியும் நிலையில் கரும்பு விவசாயம்; தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

அழியும் நிலையில் கரும்பு விவசாயம்; தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்
Updated on
3 min read

 கரும்பு விவசாயமே தமிழகத்தில் அழிந்துவிடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் இருந்த தமிழகம் இன்றைக்கு எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மத்திய - மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளின் காரணமாக இன்றைக்கு கரும்பு விவசாயமே தமிழகத்தில் அழிந்துவிடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தனியார் துறையில் 25, பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறையில் 18 என மொத்தம் 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 30 ஆயிரம் பணியாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாக ஒன்றரை லட்சம் தொழிலாளர்களும், 5 லட்சம் விவசாயிகளும் சம்மந்தப்பட்டுள்ளனர். 2011-12 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 23.79 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், 2018-19 இல் 8.40 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. இதுகுறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருவதால் 8 தனியார் கரும்பு ஆலைகளும், ஒரு கூட்டுறவு கரும்பு ஆலையும் நடப்பாண்டில் கரும்பு பிழிவதை நிறுத்தியிருக்கிறது. மற்ற கரும்பு ஆலைகள் தங்களது பிழி திறனில் மூன்றில் ஒரு பங்கு தான் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பாலான தனியார் கரும்பு ஆலைகள் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அதிமுக ஆட்சியாளர்கள் கவலைப்படாமல் கட்சியை நடத்துவது ஒற்றைத் தலைமையா ? இரட்டை தலைமையா ? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில், மாநில அரசின் பரிந்துரை விலையாக 9.5 சதவீதம் பிழி திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.2,612.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி ஆயிரம் கிலோ கரும்பில் 95 கிலோ சர்க்கரை உற்பத்தி இருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் சராசரியாக ஒரு டன் கரும்பில் பிழிதிறன் 8.9. சதவீதமாகத் தான் இருக்கிறது. இதன்படி ஒரு கிலோ சர்க்கரையில் கரும்பின் அடக்க விலை ரூ.29.35 ஆக இருக்கிறது. கரும்பின் அடக்கவிலை மற்றும் இதர செலவுகள் சேர்த்து ஒரு கிலோ சர்க்கரையின் உற்பத்தி செலவு ரூ.39 ஆக இருக்கும் போது, ஒரு கிலோ சர்க்கரையை ரூ.31-க்கு விற்க வேண்டுமென்று மத்திய அரசு விலை நிர்ணயம் செய்திருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கரும்பு விவசாயத் தொழிலே நலிவடைகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

2011-12 இல் மொத்த பிழிதிறனில் 95 சதவீதம் செயல்பட்டு 25 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்த தமிழக கரும்பு ஆலைகள், 2017-18 இல் 32 சதவீதமும், 2018-19 இல் 36 சதவீதம் என படிப்படியாக குறைந்து செயல்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தியில் பெரும் பங்கு வகித்த இஐடி பாரி நிறுவனம் தனது இரண்டு கரும்பு ஆலைகளையும் மூடுவது என முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, சக்தி சுகர்ஸ், திரு. ஆரூரான் சுகர்ஸ், ஸ்ரீ அம்பிகா சுகர்ஸ் போன்ற கரும்பு ஆலைகள் உற்பத்தியை நிறுத்துவதென முடிவு செய்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், தேவையான கரும்பு சாகுபடி இல்லாதது தான்.

கரும்பு ஆலைகள் நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிற அதேநேரத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஏறத்தாழ ரூபாய் 500 கோடிக்கு மேலாக இருக்கிறது. இதை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை தமிழக அரசு நேரிடையாக விவசாயிகளுக்கு வழங்கினால் அதை கடனாக திரும்ப செலுத்துவதற்கு கரும்பு ஆலைகள் தயார் எனக் கூறியும் இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் சர்க்கரையின் தேவை 18 லட்சம் டன்னாக இருக்கிறது. ஆனால், உற்பத்தியோ 8.4 லட்சம் டன்னாக தான் இருக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று பற்றாக்குறை மாநிலமாக மாறிவிட்டது.

பொது விநியோகத்துறை நுகர்வோருக்கு சர்க்கரை வழங்க வெளிமாநிலங்களில் கையேந்த வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆதாயம் ஏற்படுவதால் தமிழக ஆட்சியாளர்கள் இதுகுறித்து கவலைப்படுவதில்லை.

இத்தகைய அவலநிலையில் இருந்து லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிற அதிமுக அரசு இதுவரை இவர்களது பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தது ? கரும்பு விவசாயிகளை அலட்சியப் போக்கோடு அதிமுக அரசு ஏன் நடத்துகிறது ? கரும்பு விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகம் பின்னோக்கி தள்ளப்பட்டதற்கு அதிமுக அரசு தான் காரணம் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறேன்.

தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய பங்கை ஆற்றி வந்தன. இதில் வருகிற வருமானத்தில் 90 சதவீதம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. கரும்பு ஆலைகளுக்கு தேவையான கரும்பு உற்பத்தி செய்தல், அதில் பணியாற்றுகிற தொழிலாளர்கள் என அனைத்துமே கிராமப்புற பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. கரும்பு சாகுபடி என்பது இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து நீர் பாய்ச்சி செய்யப்பட வேண்டியதாகும். வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டது கரும்பு விவசாயம் தான்.

ஆனால் தமிழக அரசு வறட்சி மாவட்டம் என்று அறிவிக்கிற அளவுகோலின்படி கரும்பு விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்க முடியாது. இந்த அறிவிப்பை வைத்து எந்த விவசாயியும் கடன் நிவாரணம் கோர முடியாத வகையில் தமிழக அரசு மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஐந்தாண்டுகளாக வறட்சியில் சிக்கியுள்ளதால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் பெற்ற கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலமே தமிழகத்தில் கரும்பு விவசாயிகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

எனவே, கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடன் நிவாரணம் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்கவில்லையெனில் கரும்பு விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்", என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in