Last Updated : 26 Jun, 2019 04:40 PM

 

Published : 26 Jun 2019 04:40 PM
Last Updated : 26 Jun 2019 04:40 PM

காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்போரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருக்கும் போலீஸாரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜன். இவர் மீது, பறிமுதல் செய்யப்பட்ட தங்க மோதிரத்தை திரும்ப வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 2007-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் 2008 ஜூலையில் ஓய்வு பெற வேண்டும். ஆனால் துறைரீதியான விசாரணை நிலுவையில் இருப்பதாக கூறி ஓய்வு பெற அனுமதி மறுக்கப்பட்டது.

இவருக்கு மதுரை குற்றப்பிரிவு காவலர் குடியிருப்பில்  8.9.2006 முதல் 25.11.2013 வரை அனுமதியில்லாமல் வசித்ததற்காக ரூ.2,22,740 வாடகை பாக்கி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ரத்து செய்யக்கோரி தேவராஜன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர் நிர்வாக காரணத்துக்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

அதன் பிறகும் அவர் குடியிருப்ப காலி செய்யவில்லை. மதுரையில் பணியில் இல்லாத நாட்களில் குடியிருப்பில் வசித்ததற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

காவல்துறையில் ஒழுக்கம் என்பது இதயத்தை போன்றது. குடியிருப்புகளை காலி செய்வதிலும் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். இடமாறுதல், ஓய்வு, பணி நீக்கத்துக்கு ஆளாகும் காவலர்கள் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும்.

காவல்துறை ஒழுக்க விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளும், நீதிமன்றமும் சமரசம் செய்யக்கூடாது. இதில் சமரசம் செய்து கொண்டால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குடியிருப்பு ஒதுக்கீடு, காலி செய்வது, பராமரிப்பு போன்ற பணிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

போலீஸார் ஆண்டின் அனைத்து நாட்களிலும் பணிபுரிகின்றனர். மழை, வெயில், குளிர் காலங்களிலும் கடமையாற்றுகின்றனர். அப்படிப்பட்ட போலீஸாருக்கு பணிச்சலுகை, நலத்திட்டங்கள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். போலீஸார் ஒருவர் கூட தனக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் கிடைக்கவில்லை என நினைக்கக்கூடாது.

தமிழகம் முழுவதும் காவலர்கள் குடியிருப்பில் நேரில் ஆய்வு செய்து அங்கு அனுமதியில்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியிருந்து வரும் காவலர்களின் பட்டியலை தயாரிக்க தனி குழு அமைக்க வேண்டும். இக்குழுவின் ஆய்வு அடிப்படையில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x