கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''கடந்த 2018 நவம்பரில் வீசிய கஜா புயலில் எனது ஓட்டு வீடு முழுமையாக சேதமடைந்தது. இதற்கு அரசு அறிவித்தபடி இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தேன். என் விண்ணப்பத்தை ஏற்று வீட்டினை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இருப்பினும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ''கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் முழுமையாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் பகுதியாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு நிவாரணத் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கவில்லை. மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

''கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு வருவாய் மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதை மறக்க முடியாது. இந்தப் புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும், உடமைகளையும், மரங்களையும், பயிர்களையும் இழந்து தவித்தனர். மீனவர்கள் படகுகளை இழந்தனர்.

இவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது. இதில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய போது, ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.

பல்வேறு இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழுந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததை ஏற்க முடியாது. அரசின் இந்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இது ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதுகிறோம்.

இதனால் கஜா புயலால் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கொள்கை முடிவெடுக்க வேண்டும். அந்தக் கொள்கை முடிவு அடிப்படையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த அரசாணையில் அறிவிக்கப்படும் நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக முழு வீடு கட்டுவதற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.

ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கும் வரை இடைக்கால நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது  தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in