

ஜெயலலிதா சமாதி ஒன்றும் போதிமரம் அல்ல; சவக்குழி என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' தன்னிச்சையான அமைப்புகள் என்று அழைக்கப்படும் தேர்தல் ஆணையம், சிபிஐ, ரிசர்வ் வங்கி, நீதிமன்றம், வருமான வரித்துறை உள்ளிட்ட அதிகார அமைப்புகள் அனைத்துமே தன்னிச்சையாக இயங்கும் என்று நினைத்தோம். ஆனால் பிரதமர் மோடி வந்தபிறகு அவற்றைத் தன்னுடைய 5 விரல்களாக ஆக்கிவிட்டார். அவர் எங்கே கையே நீட்டுகிறாரோ அங்கு பாயும்.
நீட் தேர்வு கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் செய்ய திமுக முயற்சி செய்கிறது. ஆனால் அடிப்படை மாற்றம்தான் தேவைப்படுகிறது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட வாக்குச் சீட்டு முறையையே பயன்படுத்துகின்றன. ஊழலில் திளைக்கும் இந்தியாவும் நைஜீரியாவும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன'' என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மரியாதை செலுத்தியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ''ஜெயலலிதா சமாதி ஒன்றும் போதிமரம் அல்ல; அது சவக்குழி'' என்றார் சீமான்.