

தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் கிடைக்காதது இரட்டைத் தலைமையால்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றாலும் அங்கு ஒற்றைத் தலைமை இல்லாததால்தான், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
மாநிலக் கட்சியோ, தேசியக் கட்சியோ ஒருவர் தலைமையேற்றால்தான் அக்கட்சி முறையாக, சிறப்பாகச் செயல்பட முடியும். ரெண்டு பேரோ, மூன்று பேரோ, குழுக்களோ, அவர்கள் கலந்து பேசலாம். ஆலோசனை வேறு, முடிவு வேறு.
எல்லோரும் கலந்துரையாடலாம், கருத்துக் கேட்கலாமே தவிர, முடிவை ஒருவர் மட்டுமே எடுக்கவேண்டும். அதிமுகவிலே குழப்பம் உள்ளது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தார்கள். அதிமுக சார்பில் ஒருவர் வெற்றியும் பெற்றுள்ளார். மோடி தமிழகத்துக்கு ஓர் அமைச்சர் பதவியைத் தரவும் தயாராக இருந்தார். ஆனால் இரண்டு தலைமையில் அதிமுக இயங்குவதால், ஆளுக்கொரு அமைச்சரைக் கேட்டார்கள் போலிருக்கிறது. மோடி ஒரு பதவிதான் தருவதாகச் சொன்னதால் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தமிழகத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வாய்ப்பு இரட்டைத் தலைமையால் இல்லாமல் போய்விட்டது. அதேபோல 3 மாநிலங்களவை எம்.பி. பதவியை 30 பேர் கேட்கிறார்கள். இரட்டைத் தலைமையில் சீட்டா குலுக்கிப் போடமுடியும்?'' என்று கேள்வி எழுப்பினார் திருநாவுக்கரசர்.