Published : 18 Jun 2019 08:34 AM
Last Updated : 18 Jun 2019 08:34 AM

‘குரு ஸ்மரணம்’ அறக்கட்டளை தொடக்கம்: குருநாதரின் வாசிப்பை கேட்பதே பாடம்தான்! - விழாவில் உமையாள்புரம் சிவராமன் நெகிழ்ச்சி

மிருதங்க மகா வித்வான் பாலக்காடு டி.எஸ்.மணி அய்யரின் புகழைப் பரப்பும் நோக்கிலான ‘குரு ஸ்மரணம்’ அறக்கட்டளை தொடக்க விழா மயிலாப் பூர் ராகசுதா அரங்கில் 16-ம் தேதி நடந்தது.

கர்னாடக இசை உலகுக்கு பாலக்காடு மணி அய்யர் வழங்கிய பங்களிப்பை விரிவாக ஆவணப் படுத்துவது, அதை இளம் கலைஞர்கள், ரசிகர்கள் பயனுறும் வகையில் காணச் செய்வது, இசை சுற்றுலா, கருத்தரங்கு, மூத்த இசை அறிஞர்களின் விளக்க உரை மூலமாக அவரது புகழை மேலும் பரப்புவது ஆகிய திட்டமிடல்கள் குறித்து வரவேற் புரையில் பேசினார் அறக்கட்டளை நிர்வாகி பாலாஜி.

யானையும்.. முயலும்..

நாடக நடிகரும், எழுத்தாளருமான பி.சி.ராமகிருஷ்ணா பேசும்போது, ‘‘பாலக்காடு மணி அய்யர் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஆனால் லயத்தின் முக்கியத்துவம் குறித்து பெரிய சொற் பொழிவே நிகழ்த்தியிருக்கிறார். ஒரு திருமண வீட்டில், மிருதங்கம் கற்கும் சிறுவன் ஒருவன், ‘‘தாளத்தில் திஸ்ரம், மிஸ்ரம் என்கிறார்களே.. இதெல்லாம் எப்படி வந்தது?’’ என்று கேட்டான்.

அதற்கு என் குருநாதர், ‘‘யானை நடப்பதை பார்த்திருக்கியா? ‘தகதிமி தகஜொனு’ என்ற தாளக்கட்டுபோல கம்பீரமாக நடக்கும். இதுதான் சதுஸ்ரம். முயல் தாவுவதை பார்த்திருக்கியா? ‘தகிட.. தகிட..’ என்று இங்கும் அங்கும் தாவும். இதுதான் திஸ்ரம்’’ என்று மிக எளிமையாக விளக்கியதைப் பார்த்து அசந்துபோய்விட்டேன்’’ என்றார்.

மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், அறக்கட்டளையை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, ‘‘என் குருநாதர் பாலக்காடு மணி அய்யர் இசை நுணுக்கங்களை மிக நுட்பமாக கற்றுத் தருவார். பெரியவர்களின் அனுக்கிரகம் இருந்ததால்தான் நான் அவரிடம் கற்கும் பாக்கியம் கிடைத் தது.

அவரது வாசிப்பை கேட்பதே ஒரு பாடம். அதை இன்றைய தலைமுறை கட்டாயம் கேட்க வேண்டும். இறைவன் திருவருளும், குருவருளும் கிடைத்தால் இசைநம் வசமாகும். குரு ஸ்மர ணம் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு என் ஆலோசனையும், பங்களிப்பும் என்றைக்கும் இருக்கும்’’ என்றார்.

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், ஜிஎன்பி உள்ளிட்ட பலருக்கு பாலக்காடு மணி அய்யர் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்த கச்சேரிகளின் ஒலித்தொகுப்பு, விழாவில் ஒலிபரப்பப்பட்டது.

பாலக்காடு மணி அய்யரின் 60 ஆண்டு கலை வாழ்க்கையின் முக்கிய தருணங்களை வெளிக் கொணரும் வகையில் விநாடி - வினா நிகழ்ச்சியை வெங்கடாச்சலம் அய்யர் நிகழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x