என்கவுன்டர்: ரவுடியால் வெட்டுப்பட்டு சிகிச்சைப்பெறும் காவலர்களுக்கு காவல் ஆணையர் நேரில் ஆறுதல்

என்கவுன்டர்: ரவுடியால் வெட்டுப்பட்டு சிகிச்சைப்பெறும் காவலர்களுக்கு காவல் ஆணையர் நேரில் ஆறுதல்
Updated on
2 min read

ரவுடியால் வெட்டுப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்

வியாசர்பாடி காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் பவுன்ராஜ் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் நேற்று நள்ளிரவு சுமார் 11.40 மணியளவில், குற்றவாளிகளை கைது செய்ய, வியாசர்பாடி எம்.எம்.கார்டன் தெருவில் சென்றனர்.

அப்போது, கதிர் (எ) கதிரவன் (32), வல்லரசு(19) மற்றும் கார்த்திக் (32) ஆகியோர் கத்தியால் தாக்கியதில், காவலர் பவுன்ராஜுக்கு தலையில் 2 இடங்களில் வெட்டுக்காயங்களும், காவலர் ரமேஷுக்கு தோள்பட்டையில் காயமும் ஏற்பட்டது. காவலர்களை வெட்டிய அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த தனிப்படை போலீஸார் காயமடைந்த 2 போலீஸாரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அனுமதித்தனர். படுகாயமடைந்த முதல்நிலைக் காவலர் பவுன்ராஜை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தப்பிச் சென்ற குற்றவாளிகளில் வல்லரசு என்பவர் மாவதரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.எம்.டி.ஏ டிரக் பார்க்கிங் யார்டு பின்புறமுள்ள காலி மைதானத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று அதிகாலை சுமார் 4.00 மணிக்கு, தனிப்படை போலீஸார் வல்லரசுவை பிடிக்க அங்கு சென்றனர்.

அப்போது, வல்லரசு கத்தியுடன் திடீரென பாய்ந்து வந்து உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார் மற்றும் தீபன் ஆகியோரை தாக்கியுள்ளார். தற்காப்புக்காக காவல் ஆய்வாளர், வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டார். இரத்தக்காயத்துடன் கீழே விழுந்த வல்லரசுவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்  ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்த உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார் மற்றும் தீபன் ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் இன்று காலை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அங்கு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முதல்நிலைக் காவலர் பவுன்ராஜை நேரில் சந்தித்து, அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும், காவல் ஆணையர் காவலர் பவுன்ராஜின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியதுடன், பவுன்ராஜுக்கு தேவையான சிகிச்சை அளிக்குமாறு, மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், தீபன் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in