Published : 01 Jun 2019 04:19 PM
Last Updated : 01 Jun 2019 04:19 PM

காணாமல்போய் 100 நாட்கள் ஆகிறது: முகிலன் உயிருடன் இருக்கிறாரா?- திருமாவளவன் கேள்வி

முகிலன் காணாமல்போய் 100 நாட்கள் கடந்தும் இதுவரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை, முகிலன் உயிருடன் இருக்கிறாரா? என திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னெடுத்த முகிலன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமுன் தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த காணொலி ஒன்றை வெளியிட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த ஏராளமான ஆதாரங்களை தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு செல்லவேண்டிய அவர் காணாமல் போனார்.

முகிலன் காணாமல்போன நிலையில் அவரை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டும் 100 நாட்களை கடந்தும் முகிலன் குறித்த தகவல் இல்லை. இதுகுறித்து அனைத்துக்கட்சிகள் போராட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

இதில் திமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், சமூக இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

“முகிலன் காணாமல்போன விவகாரத்தில் மணல்கொள்ளை சம்பந்தப்பட்டவர்கள், ஸ்டெர்லைட் நிர்வாகமோ, காவல்துறையோ அல்லது அவரது போராட்டம் மூலம் அவர் பெற்ற பகைமையோ காரணமாக இருக்கலாம். ஆகவே இந்த 4 கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும்.

முகிலன் காணாமல் போன விவகாரத்தில் காவல்துறை விசாரனையை துரிதப்படுத்தவில்லை. முகிலன் குடும்பத்தினரிடம் விசாரணை  நடத்தி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது காவல்துறை. முகிலன் உயிருடன் இருக்கிறாரா என தெரியப்படுத்த வேண்டும்.

வரும் 6-ம் தேதி முகிலன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் 6-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும். முகிலனை தேடி கண்டுபிடிக்கும் வரை நீதி கிடைக்கும் வரை போரட்டகுழுவோடு விடுதலை சிறுத்தைகள் துணையாக நிற்கும்”

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x