கடலில் காணாமல்போன 3 மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ

கடலில் காணாமல்போன 3 மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ
Updated on
1 min read

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 15 மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 63 படகுகளை மீட்கவும் உடனடியாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன மூன்று தமிழக மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க இந்தியக் கடலோர காவல்படை மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடமேற்குப் பகுதியிலிருந்து ஆகஸ்டு 25-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் நான்குபேர் மறுநாள் கரை திரும்பவில்லை. இலங்கை நெடுந்தீவுக்கு அருகில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியது. படகில் ஜான் கென்னடி, டேனியல், வில்சன், எஸ்ரோன் ஆகிய நான்கு மீனவர்கள் இருந்தனர். படகு மூழ்கியதும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜான் கென்னடி மட்டும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, பாம்பனுக்கு அழைத்து வரப்பட்டார். மற்ற மூன்று மீனவர்களின் கதி என்ன ஆயிற்று என்று இதுவரை தெரியவில்லை.

மூன்று மீனவர்கள் கடலில் காணாமல் போய் பத்து நாட்கள் ஆனபின்பும், இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் பணியில் இறங்காதது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை மீண்டும் சிங்கள கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்துள்ள 15 மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 63 படகுகளை மீட்கவும் உடனடியாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன மூன்று தமிழக மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க இந்தியக் கடலோர காவல்படை மூலம் தேவையான ஏற்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in