Published : 22 Jun 2019 03:36 PM
Last Updated : 22 Jun 2019 03:36 PM

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் விமானத்தை மோதி நிரூபித்துக் காட்டுங்கள்: சீமான்

கூடங்குளம் அணுக்கழிவு பாதுகாப்பு என்றால் அதை பந்துபோல் உருட்டி தலைவர்கள் உதைத்து விளையாடுங்கள். மெரினாவில் தலைவர்கள் சமாதிக்கு அருகில் புதையுங்கள் என்று பேசி சீமான் அதிர்ச்சியூட்டினார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

“இங்கே தலைவர்கள் கூடங்குளத்தில் உள்ள அணு உலை பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள். விமானம் மோதினால்கூட ஒன்றும் ஆகாது என்கிறார்கள். எங்களால் நம்ப முடியவில்லை நியாயமாரே. எங்களுக்குப் புரியவில்லை.

பள்ளிக்கூடத்தில் பாடம் புரியவில்லை என்றால் செய்முறை மூலம் பாடம் நடத்துவார்கள். அதுபோல எங்களுக்கு செய்முறைப் பயிற்சி வேண்டும். யார் அணு உலை பாதுகாப்பு என்று கூறுகிறாரோ அவரையெல்லாம் ஒரு விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ ஏற்றிக்கொண்டுபோய் அணு உலை மீது ஒரு தடவை மோதிக்காட்டுங்கள்.

வெடிக்கவில்லை என்றால் ஏற்றுக்கொள்கிறோம். பிரச்சினை இல்லை என்று முடிவுக்கு வருவோம். எதற்கு நாங்கள் தண்டமாக போஸ்டர் அடித்து, நோட்டீஸ் அடித்து கூட்டம் நடத்தப்போகிறோம்.  

அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவை இல்லை. நான் சிம்னி விளக்கில் படித்து வந்தவன். இதுபோன்று பலர் இங்கு உள்ளார்கள். நாங்கள் கொசுக்கடியில், மின்விசிறி இல்லாமல்கூட இருந்துகொள்கிறோம். எங்களுக்கு இந்த அணு உலை மூலம் வரும் மின்சாரம் வேண்டாம்.

இந்த அணுக்கழிவைப் பந்துபோல் உருட்டிக் கொண்டு போய்விடும் என்கிறார்கள். அப்படியானால் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் ஒரு கால்பந்துபோல் உருட்டி விளையாடுங்களேன். கோலிகுண்டுபோல் சிறிதாக உருட்டி விளையாடுங்களேன்.

பாதுகாப்பான ஒன்று என்றால் ஏன் கூடங்குளத்திலும், இடிந்தகரையிலும் புதைக்கிறீர்கள். பாதுகாப்பானது அணுக்கழிவு என்றால் நாடாளுமன்றத்துக்குக் கீழ் புதையுங்கள். பாதுகாப்பாக இருக்கும் அல்லவா? இங்கு தமிழ் நாட்டில் அதிகபட்ச பாதுகாப்புள்ள இடம் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதிகள் உள்ள மெரினா கடற்கரைப் பகுதிதான்.

அங்கு தலைவர்கள் சமாதிக்கு இடையில் இந்த அணுக்கழிவுகளைப் புதையுங்களேன். அங்குதான் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறீர்களே. ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் இறந்துவிட்டால் இந்தியா முழுவதும் தேர்தலா அல்லது இடைத்தேர்தலா?”.

இவ்வாறு சீமான் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x