Published : 25 Jun 2019 03:15 PM
Last Updated : 25 Jun 2019 03:15 PM

சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களைக் குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்கள் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரை விழுக்காடு வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை மற்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களின் நலனை பாதிக்கும் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.


உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியர்களிடம் தான் சேமிக்கும் பழக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. எதிர்காலத் தேவைகளுக்காகவும், வயது முதிர்ந்த காலத்தில் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவும் தான் இந்திய மக்கள் சேமித்து வருகின்றனர். சேமிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதை மக்களிடம் ஊக்குவிப்பதற்காகவும் தான் சிறு சேமிப்புகளுக்கு கடந்த காலங்களில் அரசு அதிக வட்டி விகிதம் வழங்கி வந்தது.

ஆனால், 1991 ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு தொழில்துறையினருக்கும், பெருநிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

அதன் விளைவாக, அஞ்சலக வைப்புத் திட்டத்திற்கு 7%, கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு 7.7%,  தேசிய சேமிப்புத் திட்டத்துக்கு 7.3%, பி.பி.எஃப் என்றழைக்கப்படும் பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதிக்கு 8%, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 8.7% என்ற அளவில் தான் இப்போது வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான திட்டம் என்று கூறி ஆண்டுக்கு 9.2% வட்டி விகிதத்துடன் தொடங்கப்பட்ட செல்வமகள் திட்டத்திற்கு இப்போது 8.5% மட்டுமே வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் 0.5%  குறைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.

வட்டி விகிதத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையும், இந்திய ரிசர்வ் வங்கியும் கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில் வளர்ச்சியைப் பெருக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்கு வசதியாக பெரு நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், அதற்காகத் தான் சிறு சேமிப்புகள் மீதான வட்டி குறைக்கப்படுவதாக விளக்கம் அளித்திருக்கின்றன. இது கிஞ்சிற்றும் மனிதநேயம் இல்லாத விளக்கமாகும். பெரு நிறுவனங்களுக்கு விருந்து படைப்பதற்காக ஏழை மக்களின் பசி தீர்ப்பதற்கான எளிய உணவைப் பறிப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்.

சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் எவரும் பெரும் பணக்காரர்கள் அல்ல. தங்களின் ஒரு மாத வருவாயில் மிச்சம் பிடிக்க முடிந்த ரூ.200 அல்லது 500 ரூபாயை சேமிக்கும் ஏழைகளும், அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தை சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் மூத்த குடிமக்களும் தான் சிறுசேமிப்புத் திட்டங்களின் முதலீட்டாளர்கள் ஆவர்.

ஆதரவற்ற, உழைக்கும் வயதைக் கடந்த ஏழை மக்கள் பலர் தங்களின் குடும்பத்திற்காக இருந்த சிறிய சொத்தை விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தை சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, வட்டி வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வட்டிக் குறைப்பு மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது.

ஒருபுறம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முதலீடு செய்யும் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிக் குறைப்பை உடனடியாகச் செயல்படுத்தும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுமக்கள் வாங்கும் சிறு வணிகக் கடன், வீட்டுக்கடன் போன்றவற்றின் மீதான வட்டியை மட்டும் குறைப்பதில்லை. இது என்ன வகையான நியாயம் என்பதும் தெரியவில்லை. சலுகைகளையெல்லாம் பெரு நிறுவனங்கள் அனுபவிக்க வேண்டும்; சுமைகளை ஏழைகள் மட்டும் சுமக்க வேண்டும் என்பது சமநீதி அல்ல.

சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் நிதியைத் தான் மத்திய அரசு அதன் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சேமிக்கும் வழக்கத்தைக் கைவிட்டால், அரசு அதன் தேவைகளுக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும்.

எனவே, சிறு சேமிப்புக்கான வட்டியை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசு வணிக நோக்குடன் செயல்படாமல் சமூக நோக்குடன் செயல்பட வேண்டும். இதை உணர்ந்து சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்", என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x