

தேனி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. தமிழகமெங்குமே பருவமழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
தேனியில் தற்போதுதான் தட்டுப்பாடு தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தேனி நேரு சிலை அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்று தண்ணீரை வீணாக்கக்கூடாது என்பதை நூதனமான முறையில் பேனர் ஒட்டி விழிப்புணர்வு செய்து வருகிறது.
தங்கள் உணவகத்தில் உணவு உண்ணும் வாடிக்கையாளர்கள் தேவையான அளவு மட்டுமே டம்ளரில் தண்ணீரைப் பெறுமாறும், டம்ளரில் தண்ணீரை மிச்சம் வைக்க வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே உணவகங்கள் சாப்பிடும் பலரும் ஒரு மடக்கு தண்ணீர் குடிக்க சர்வரிடம் ஒரு டம்ளர் தண்ண்ீஇர் வாங்கிவிட்டு மீதத்தை அப்படியே வைத்துவிட்டுச் செல்வர். இதனை மற்றவர்களுக்கும் கொடுக்க இயலாது.
அதனால் வாடிக்கையாளர்கள் டம்ளர் தண்ணீரைக் கூட மிச்சப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த பேனரை அந்த ஓட்டல் வைத்துள்ளது.
இன்னும் ஒரே வாரம்..
இதற்கிடையில் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்னும் ஒரே வாரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக கடந்த 13-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
ஆனால், இந்தத் தண்ணீர் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தேனி மக்களுக்கு குழாய்களில் கிடைக்கிறது. காரணம் தேனி மாவட்ட விவசாயிகள் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படாததால் குடிநீருக்காக விநியோகிக்கப்படும் தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்துவிடுகின்றனர்.
இதனால், வைகை ஆறுக்கு மிகமிக குறைந்த அளவே தண்ணீர் வந்து சேர்கிறது. தேனி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகவில்லை.
கேரளா தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்வதை எதிர்நோக்கியுள்ளது. அங்கு மழை பெய்து அணை நிறைந்தால் மட்டுமே கூடுதலாக தண்ணீர் திறந்துவிடும் சூழல் இருக்கும் நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் தேனி, மதுரை மாவட்டங்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலவுகிறது.