

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் ஜூன் 5-ல் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக ரஞ்சித் மீது, கலகம் உண்டாக்குதல், சாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், "ராஜராஜ சோழன் தொடர்பான வரலாற்று உண்மைகளை தான் பேசினேன். பல்வேறு புத்தகங்களில் உள்ள தகவல்களை தெரிவித்தேன். என்னைப்போலவே பலரும் பேசினர். ஆனால் என் பேச்சு மட்டுமே சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது.
உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி குறிப்பிடும் போது, பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கும் போது ஆயிரம் காலத்துக்கு முன்பு வாழ்ந்த மன்னரைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்? வன்முறையை தூண்டும் வகையில் பேசவில்லை என்றால் ஏன் நீதிமன்றம் வர வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் முத்துக்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் சார்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், முகமது ரஸ்வி வாதிடுகையில், "ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம். அவரது ஆட்சியில் நலிந்த பிரிவினருக்கு கொடையாக நிலங்கள் வழங்கப்பட்டது. அதுதொடர்பான தகவல்கள் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. நீர் மேலாண்மைக்கு ராஜராஜ சோழன் எடுத்துக்காட்டாக உள்ளார்.
தேவையில்லாமல் ராஜராஜ சோழன் தொடர்பாக ரஞ்சித் பேசியுள்ளார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்றார்.
இதையடுத்து விசாரணையை புதன் கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்று திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை திருப்பனந்தாள் வழக்கில் மனுதாரரை கைது செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.