

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகளை உபயோகப்படுத்துவோருக்கான அபராத முறைகளை அரசு இன்று வகுத்து வெளியிட்டுள்ளது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது மற்றும் பயன்படுத்துவோர் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் துறை செயலாளர்கள் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.
நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் நம் சுற்றுச்சூழலைச் சேதப்படுத்துவதோடு மனித இனத்திற்கும், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
உலக சுற்றுச்சூழல் தினமான 2018 ஜூன் -5 அன்று தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜனவரி.1 2019 முதல் தடிமன் பாகுபாடின்றி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடைசெய்வதற்கு அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது.
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாகிட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை அறிவிப்பின் மீதான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது மற்றும் பயன்படுத்துவோர் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கவும், தொடர்ந்து பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும், ஏற்கனவே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அபராதம் விபரம் வருமாறு:
நிறுவனங்கள்:
முதல் முறை ரூ.25,000/- அபராதம்,
இரண்டாம் முறை ரூ.50,000/- அபராதம்
மூன்றாம் முறை ரூ.1 லட்சம் அபராதம்.
பேரங்காடிகள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள்:
முதல் முறை ரூ.10,000/- அபராதம்
இரண்டாம் முறை ரூ.20,000/- அபராதம்.
மூன்றாம் முறை ரூ.25,000/- அபராதம்.
மளிகைக் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள்.
முதல் முறை ரூ.1,000/- அபராதம்.
இரண்டாம் முறை ரூ.2,000/- அபராதம்.
மூன்றாம் முறை ரூ.5,000/- அபராதம்.
மூன்று முறை அபராதம் விதித்த பின்பும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் மேற்கண்ட நிறுவனங்களின் வணிக உரிமத்தை ரத்து செய்யப்படும்.
சிறிய கடைகளுக்கு
முதல் முறை ரூ.100/- அபராதம்.
இரண்டாம் முறை ரூ.200/- அபராதம்.
மூன்றாம் முறை ரூ.500/- அபராதம்.
மூன்று முறை அபராதம் விதித்தப்பின் மீண்டும் பயன்படுத்தும் சிறிய வணிகக் கடைகளின் மீது சாலையோர வியாபாரிகள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இதுநாள்வரை 820.50 மெட்ரிக் டன் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.158.69 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஆணையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவற்றிற்குப் பதிலாக மாற்றுப்பொருட்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.