மோட்டார் பைக் ரேஸ், தாறுமாறாக வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் தகுதி நீக்கம்: போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை

மோட்டார் பைக் ரேஸ், தாறுமாறாக வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் தகுதி நீக்கம்: போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை
Updated on
2 min read

சென்னை காமராஜர் சாலையில் இருசக்கர வாகனப் பந்தயங்களில் ஈடுபட்டவர்களை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் இணைந்து பிடித்தனர். இதில் 130 வாகனங்கள் சிக்கின. நடவடிக்கை தொடரும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் சாகசங்களில் ஈடுப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுக்க வந்த போலீஸாரிடம் மோதலில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் செய்த சாகசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

அதே நாள் அதிகாலையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வேகமாக சாகசம் செய்தபடி மோட்டார் சைக்கிளை இயக்கிய இளைஞர் பாலாஜி என்பவர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே பேருந்து ஒன்றை முந்த முயல, பேருந்தில் மோட்டார் பைக் உரச தூக்கி வீசப்பட்டார். இதில் பின்னால் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாலாஜி படுகாயமடைந்தார். இதேபோன்று சனிக்கிழமை இரவு அண்ணா சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கார் மீது மோதியதில் உயிரிழந்தார். மேற்கண்ட சம்பவங்களும் இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீஸார் மீது பயமின்மையும், சட்டத்தை மதிக்காத போக்கும் விமர்சனத்தை எழுப்பியது.

இந்நிலையில் நேற்றிரவு போக்குவரத்து போலீஸார் கடற்கரை காமராஜர் சாலையில் சட்டம் ஒழுங்கு போலீஸாருடன் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு பலரைப் பிடித்தனர்.

இது குறித்து போக்குவரத்து போலீஸார் அறிக்கை:

“சென்னை  காமராஜர் சாலையில், வாகனப் பந்தயங்களில் ஈடுபடுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களைத் தடுக்கவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம்&ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

இதன்படி நேற்று (02.06.2019) இரவு காமராஜர் சாலையில் 29 இடங்களில் சோதனை தடுப்புகள் (Check Posts) அமைத்து , 20 சட்டம் & ஒழுங்கு ரோந்து வாகனங்கள் மற்றும் 5 போக்குவரத்து ரோந்து வாகனங்களை ஈடுபடுத்தி, உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில், இரண்டு காவல் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் 130-க்கும் மேற்பட்ட போலீஸார் இந்த சிறப்பு வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கையில் அதி வேகமாகவும் ஆபத்தாகவும் வாகனங்களை ஓட்டியதற்காக (Over speed, rash and negligent driving) 80 வழக்குகளும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக (Drunken Driving) 22 வழக்குகளும், இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததற்கு (Triple Riding) 10 வழக்குகளும், தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காக (Without Helmet) 130 வழக்குகள் என மொத்தம் 242 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் 7 நான்கு சக்கர வாகனங்களும், 16 இரண்டு சக்கர வாகனங்களும், 1 ஆட்டோ என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆபத்தான விதத்தில் வாகனத்தை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை தொடரும்”.

இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in