

திருக்கழுக்குன்றம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், நல்லூர் கிராமப் பகுதியில் ஆகஸ்ட் மாதம் மர்மக் காய்ச்சலால் 25-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட சைதாப்பேட்டை துணை சுகாதார இயக்குநர் ராஜசேகர் தலைமையில் மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி அளித்து செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாரியம்மாள் (45) என்பவர், மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார். மர்மக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு, கல்பாக்கம் செல்லும் புறவழிச்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சட்ராஸ் போலீஸார் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் இளங்கோவன், துணை சுகாதார இயக்குநர் ராஜசேகர் ஆகியோர் சமாதானம் செய்தனர்.
இது குறித்து, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது: ‘மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. கிராமப் பகுதியில் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்காமல், செவிலியர்கள் அரைகுறை சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனால், மர்மக் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு வருகின்றது’ என்றனர்.
இதுகுறித்து, துணை சுகாதார இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது: ‘காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
நல்லூர் கிராமப் பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதால், செவிலியர்கள் மூலம் கண்காணித்து வந்தோம். மக்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார். எனினும், தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.