Published : 22 Jun 2019 09:30 am

Updated : 22 Jun 2019 09:30 am

 

Published : 22 Jun 2019 09:30 AM
Last Updated : 22 Jun 2019 09:30 AM

தொழிலுக்கு மதிப்பளிக்கும் யாரும் தோற்க மாட்டார்கள்- ஈரோடு கே.கே.எஸ்.கே. ரபீக்

ஒரு செருப்பு விற்பனை செய்யும் கடைக்குள் போனால், அங்கு பணிபுரியும் வயது முதிர்ந்த ஊழியர், செருப்பை எடுத்து நம் காலில் அணிவித்து உதவி செய்கிறார். நம்மைவிட வயதில் மூத்தவர், செருப்பை எடுத்து, நாம் கால்களைத் தொட்டு அணிவிக்கிறாரே என்று நமக்குத் தயக்கமாக இருந்தாலும், அவர் சிரித்த முகத்துடன் அந்த வேலையைச் செய்வார். அதுதான் தொழில் மரியாதை. அந்தக் கடைக்கு வெளியே சென்ற பிறகு, அதே நபரை நம்முடைய காலுக்கு செருப்பை மாட்டிவிடச் சொன்னால், பணம் கொடுத்தால்கூட செய்யமாட்டார். அது அவருடைய சுயமரியாதை. வாடிக்கையாளரை மதித்து, அவர் மனம் நிறைவடையும்படி நடந்து கொள்வதே நாம் செய்கிற தொழிலுக்கு, நாம் செலுத்துகிற மரியாதை. செய்யும் தொழிலுக்கு மதிப்பளிக்கிற யாரும் தோற்க மாடார்கள்” என்று கூறுகிற ரபீக், கே.கே.எஸ்.கே. இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக பல்வேறு நாடுகளுக்கு தோல் ஏற்றுமதி செய்கிறார். அவரை சந்தித்தோம்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்று பாரதியார் சொன்னதை, ஈரோடு அப்படியே பின்பற்றுகிறது. கரும்பும், மஞ்சளும் செழித்து வளர்கிற வயல்களை ஈரோடு மாவட்டத்தில் பார்க்கலாம். தமிழகம் கடந்து, இந்திய அளவில் பெயர் பெற்ற பெரிய தொழில் நிறுவனங்கள் ஈரோடு மாவட்டத்தில் அதிகம். உழவாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் உழைப்பே பிரதானம் என்று நினைக்கிற மக்கள் மத்தியில் வாழும்போது, முன்னேற வேண்டும் என்கிற நினைப்பு தானாகவே வந்துவிடும்.


மாரியம்மன் கோயில் கட்டிய ராவுத்தர்!

கொங்கு மண்டலத்தில் உள்ள அவிநாசி அருகே, ராவுத்தர்பாளையம் என்கிற கிராமம் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு மாரியம்மன் கோயிலை கட்டியவர் ராவுத்தர் என்கிற இஸ்லாமியர். அந்த காலத்தில் அந்தப் பகுதியை நிர்வாகம் செய்த ராவுத்தர், எல்லா தரப்பு மக்களுக்கும் நெருக்கமானவராக இருந்து, பல நன்மைகள் செய்திருக்கிறார்.

முக்கியமான நகரங்களை இணைக்கும் சந்திப்பாக அவிநாசி இருப்பதால், அதிகமான வணிகர்களின் வண்டிகள் வந்துபோகும். வழிப்பறி செய்கிற கொள்ளைக் கும்பல் பயம் அதிகம் இருந்த காலத்தில், வணிகர்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுத்து, அனைவரின் மனதிலும் இடம்பெற்று இருக்கிறார் ராவுத்தர். அவரின் அன்பு மகளை சின்னம்மை நோய் தாக்கியபோது, `மாரியம்மனை வேண்டிக்கொண்டால் நோய் குணமாகும்’ என்று இந்து மதப் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மகளை குணப்படுத்தினால், மாரியம்மனுக்கு கோயில் கட்டுகிறேன் என வேண்டிக்கொண்ட ராவுத்தர், குழந்தைக்கு அம்மை நோய் விலகியதும், வேண்டுதல்படி மாரியம்மனுக்கு கோயில் கட்டிக் கொடுத்ததாக சொல்கிறார்கள். பெரிய செல்வந்தராக இருந்தாலும், ராவுத்தரின் பெயர், அவருடைய பணத்துக்காக மக்கள் மனதில் நிலைக்கவில்லை. அவர் செய்த தர்ம குணத்தாலும், பிரிவை விரும்பாத ஒற்றுமை மனத்தாலும் இன்று அந்த ஊருக்கே ‘ராவுத்தர்பாளையம்’ என்று பெயர் வந்திருக்கிறது. கொங்கு பகுதியில் பல நூறு ஆண்டுகளாக ராவுத்தர் என்கிற பெயர் பிரபலமாக இருந்ததன் அடையாளமாக, குலதெய்வ வழிபாடு நடக்கிற சில இடங்களில், குதிரையில் கையில் வாளுடன் ராவுத்தர் குமாரசாமி சிலைகள் இருக்கின்றன. பலருக்கு ‘ராவுத்தர் கவுண்டர்’ என்ற பெயர்கூட இருந்திருக்கிறது.

மதநல்லிணக்கமும், காதர் முகைதீனும்...

இதுபோன்ற கதைகள் மூலம் நல்லிணக்கத்தைச் சொல்லி வளர்த்த எங்கள் அப்பா காதர் முகைதீன், முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அனைத்து சமுதாயத்தினருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருந்தார். எங்கள் குடும்பங்களில் இஸ்லாமிய பெயருடன் தமிழ்ப் பெயரும் சூட்டி அழைப்பது வழக்கம். காதர் முகைதீன் என்ற அப்பாவின் பெயரோடு, பெரிய தம்பி என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஊரில் பலருக்கு பெரிய தம்பி என்ற பெயர்தான் அறிமுகம். அத்தையை கண்ணம்மா என்றும், முகமது ஹைதர் என்ற பெயருடைய அண்ணனை தம்பிக்கண் என்றும் கூப்பிடுவார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பெருமாள் மலைக்குச் செல்ல, பக்தர்கள் எங்கள் தோட்டத்தின் வழியாகப் போவார்கள். அவர்கள் இளைப்பாற இடமும், உணவும் தருவதை மகிழ்ச்சியாக செய்வார் அப்பா. பெரியதம்பி தோட்டம் என்று மக்களும் உரிமையோடு எங்கள் தோட்டத்தில் இளைப்பாறுவார்கள். மாட்டுப் பொங்கல் தினத்தன்று தோட்டத்தில் மாடுகளை அலங்கரித்து, குடும்பமாக பொங்கல் வைப்போம். ஆடிப் பெருக்கு நாளில் காவிரியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதைப் பார்க்க, தவறாமல் பவானி கூடுதுறைக்கு அப்பா அழைத்துப் போவார்.

அதேபோல, சுற்றுவட்டாரத்தில் சொத்து பஞ்சாயத்தில் நியாயம் சொல்ல, குடும்பப் பிரச்சினையில் தீர்வு சொல்ல என்று எங்கள் பகுதி மக்களின் வாழ்வோடு கலந்தே, அப்பாவின் வாழ்க்கை அமைந்தது.

விவசாயப் பின்னணி...

தாத்தா காலத்திலிருந்தே விவசாயம்தான் தொழிலாக இருந்தது. தென்னை மரங்களை நம்பிக்கையுடன் வளர்க்கிற விவசாயப் பின்னணியில் வளர்ந்த அப்பாவுக்கு, பல துறைகளில் ஆர்வம் இருந்தது.

சிறு வயதிலிருந்தே நிலத்தில் பாடுபட்டதுடன், குடும்ப பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய வைத்தியத்திலும் அவருக்கு ஆர்வமுண்டு. பல பகுதிகளில் உள்ள சித்த வைத்தியர்களுடன் நட்பு கொண்டிருந்தார். பாம்புகடி, தேள்கடி போன்ற விஷமுறிவு மருந்துகளை விலைகொடுத்து வாங்கி, கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவார். அதேபோல, பஞ்சாங்கம் குறிப்பது, மனையடி சாஸ்திரபடி வீடு கட்டத் திட்டமிடுவது என பன்முகத் திறமையுடன் விளங்கினார்.

தோல் பதனிடும் தொழில்!

விவசாயம் கடந்து, வேறு தொழில் கைவசம் இருக்க வேண்டும் என்று விரும்பி, தோல் பதனிடும் தொழிலை, தனது தம்பியுடன் இணைந்து தொடங்கினார். 50 ஏக்கரில் விவசாயம் செய்துகொண்டே, ஒரு தோல் தொழிற்சாலையையும் தொடங்கி நடத்தினார். 1950-களில் சர்வதேச சந்தையில் தோல் பொருட்களுக்கு நல்ல எதிர்காலம் உருவானது. காலில் போடும் ஷு, இடுப்பில் கட்டும் பெல்ட், பைகள் என தோலின் பயன்பாடு அதிகரித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்விலும் தோல் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. சுத்தமான தோல் என்று சொல்லி விற்பனை செய்கிற அளவுக்கு, மக்களிடம் தோல் பொருட்கள் செல்வாக்குப் பெற்றன. தோல் பதனிடும் தொழிலுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதை அறிந்துகொண்ட அப்பா, தோல் பதனிடும் தொழிலில் இறங்கினார். பக்கத்து மாநிலங்களிலும், தமிழக சந்தைகளிலும், மண்டிகளிலும் கச்சாத் தோல் வாங்கிப் பதனிட்டு, விற்று வந்தார். தரமான தோல் கொள்முதல் செய்வதால், அப்பாவின் தொழில் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக, மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பாய்ச்சும் வசதி வருவதற்கு முன்பு, எல்லா விவசாயிகளும் தோலினால் ஆன பைகளைக் கொண்டே, மாடுகளை வைத்து வயலுக்குத் தண்ணீர் இறைத்தனர். சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் விவசாயிகள் அப்பாவிடம் தரமான தோல் பைகள் கிடைக்கும் என்று தேடி வருவார்கள்.

பஞ்சாங்கம் கணிப்பதுபோல, புதிய தொழிலின் வளர்ச்சியையும் அவர் கணிக்கும்வரை, எங்களுக்கும், தோல் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீர்வளம் அதிகமுள்ள கொங்கு பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பே, எங்கள் குடும்பம் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டது.

புத்திர பாக்கியம்...

அப்பாவை திருமணம் செய்த, முதல் தாரமான எங்கள் பெரியம்மாவுக்கு புத்திர பாக்கியம் இல்லை. அதனால், தொழில் ஆர்வம் குறைவாகவே இருந்திருக்கிறது. கொங்கு பகுதியில் தோல் தொழிற்சாலைகள் பிரபலமாவதற்கு முன்பே, அப்பா தொழிற்சாலை தொடங்கியிருந்தாலும், அதை பெரிய அளவில் வளர்த்தெடுக்கவில்லை. நமக்குப் பிறகு யார் இதையெல்லாம் பார்த்துக்கொள்வார்கள்? என்ற எண்ணம், தொழில் ஆர்வத்தை, தொழில் முனைப்பாக மாற்றவில்லை.

தனியாளாக 50 ஏக்கர் நிலத்தைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்று, பெரும்பகுதியை வந்த விலைக்கு விற்றுவிட்டார்.

நாளடைவில் குழந்தைப் பேறு வேண்டி, இரண்டாவது திருமணம் செய்தார். அவருடைய ஏக்கம் தீரும்வகையில், அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள் பிறந்தோம். ஊரில் நடக்கும் நல்ல காரியங்களில் முன்நிற்பதிலும், விவசாய தொழில் செய்வதிலும் அப்பா திருப்தி அடைந்தார். அதனால், தோல் விற்பனைத் தொழிலில் மீண்டும் ஈடுபடவில்லை. தோல் தொழில் பற்றிய அடிப்படை அறிமுகத்தை அரிச்சுவடியாக, அப்பாவிடமிருந்து வாய்மொழியாக நாங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அந்தத் தொழிலில் ஈடுபட வேண்டுமென்கிற எண்ணம் எதுவும் இருந்தது இல்லை. பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதிலேயே பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

வாழ்க்கையை புரட்டிப் போட்ட மரணங்கள்...

கவலைகள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் மனநிலையை, பெற்றோரின் திடீர் மரணம் மொத்தமாக புரட்டிப்போட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்மா திடீரென இறந்துபோக, அம்மாவின் பிரிவைத் தாங்க முடியாத அப்பா, அடுத்த நாளே உயிரிழந்தார். அடுத்தடுத்த இரண்டு மரணங்களை யாராலும் எதிர்கொள்ள முடியாது.

என் அண்ணனுக்கு 15 வயதும், எனக்கு 14 வயதும், தங்கைக்கு விவரம் புரியாத வயதும் இருந்த நிலையில், பெற்றோரின் இழப்பை ஏற்றுக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியாமல் திகைத்து நின்றோம். அன்பு செலுத்தி வழிகாட்ட பெற்றோர் இல்லையே என்ற தீராத குறை மட்டுமே இருந்தது.

எனக்கும், அண்ணனுக்கும் சேர்த்து ஆறு லட்ச ரூபாய் அப்பாவின் பங்கு பணம் கிடைத்தது. இதை வைத்து, தொழிலை செய்து, வாழ்வில் முன்னேறுங்கள் என்று ஆசிர்வதித்து அப்பா கொடுத்துவிட்ட பணமாகவே அந்தப் பணத்தைக் கருதினோம்.

`டீன் ஏஜ்’ பருவத்தில் தொழில்முனைவோர்!

புதிதாக ஒரு தொழில் தொடங்குதற்கான முதலீட்டுப் பணம்போல அந்தத் தொகை இருந்தது. ஆனால், அந்த இளம் வயதில், என்ன தொழில் செய்வது? எப்படி அதை தொடங்குவது? என்கிற எந்த தெளிவும் எங்களிடம் இல்லை. தந்தை உருவாக்கிய ஒரு தோல் தொழிற்சாலை மூடிக்கிடந்தது. கையில் இருக்கும் ஆறு லட்சத்தை மூலதனமாக வைத்து, மூடிக்கிடக்கும் சிறிய தோல் தொழிற்சாலையைத் திறந்து, தோல் வியாபாரத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தோம். அண்ணனும், நானும் தொழிலில் ஈடுபடத்தொடங்கிய 1980-களில், தோல் பதனிடும் தொழிலில் பெரிய மாற்றம் வரத்தொடங்கியது. அதுவரை தாவரங்கள், சுண்ணாம்பு போன்ற இயற்கையான பொருட்களை வைத்து தோல் பதனிடும் தொழில் நடந்துவந்தது. இந்தியாவில் தோல் ஏற்றுமதி தொழில் ஒரு துறையாக வளரவில்லை என்றாலும், உலக அளவில் வேகமாக வளர்ந்து வந்தது.

மத்திய அரசின் உத்தரவு!

1979-ல் அன்றைய மத்திய அரசாங்கம், சர்வதேச சந்தையில் தோல் பொருட்களுக்கு இருக்கும் தேவையைக் கருத்தில்கொண்டு, ஏற்றுமதியை ஊக்குவித்து, அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்ட முடிவு செய்தது. ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது, அந்நாட்டின் பொருளாதார பலத்தையே தீர்மானிக்கும். ஏற்றுமதி தொழில் மூலமே அந்நியச் செலாவணியுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்பதால், தோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் வழிமுறைகளை வகுக்க ‘சீதாராமையா கமிட்டி’யை அமைத்தது மத்திய அரசு.

அந்தக் கமிட்டியின் பரிந்துரையின் பேரில், இ.ஐ. டேர்ண்ட் என்று சொல்லப்படும், இயற்கையான பதப்படுத்தும் முறையை தடை செய்து, மதிப்பு கூட்டப்பட்ட ரசாயனங்கள், சாயப் பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வண்ணத் தோல்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. திடீரென வந்த மாற்றத்தை தோல் தொழிற்சாலை அதிபர்கள் உள்வாங்கவில்லை. தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதியவர்களுக்கு, சுற்றுச்சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு இல்லை. அங்கிருந்துதான் தோல் தொழிற்சாலை கழிவால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினை தொடங்கியது. அப்போதுதான் நாங்கள் தோல் பதனிடும் தொழிலுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தோம். இருபது வயது முடிவதற்குள்ளாகவே, முழுமையாக தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டேன். தொழிலின் அடிப்படைகளை நன்றாகத் தெரிந்து கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்தினேன்.

ஏற்றுமதி வாய்ப்புகள்!

இந்தியாவின் ஒட்டுமொத்த தோல் ஏற்றுமதியில், 70 சதவீதம் தமிழகத்தில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது என்ற புள்ளிவிவரம் எங்களை உற்சாகப்படுத்தியது. உள்ளூரில் தோல் வியாபாரம் செய்வதைவிட, வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதி செய்தால், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்பது புரிந்தது.

ஆனால், உள்ளூர் வியாபாரத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தரமான தோலை கொள்முதல் செய்து, சிறப்பாக தோல் பதனிடல் செய்யத் தெரிந்ததே தவிர, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது பற்றிய எந்த தெளிவும் இல்லை. ஒருமுறைகூட வெளிநாடு போகாதவர்கள், ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு பெரு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய நினைத்தது தன்னம்பிக்கையா? அறியாமையா? என்ற கேள்வி வந்துகொண்டே இருந்தது. சிந்தனை அளவில் தன்னம்பிக்கையாகவும், ஆரம்பத்தில் செயல் அளவில் அறியாமையாகவும் இருந்தது. அறியாமையில் இருந்துதானே ஒன்றை அறிந்து கொள்ள முடியும் என்ற துணிவுடன், ஏற்றுமதி உலகத்துக்குள் குழந்தையின் நடையைப்போல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தோம்.

இடைவேளை... நாளை வரை....


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x